முதல்வரை தரம் தாழ்த்தி பேசுவதா? : சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Published On:

| By Kavi

முதல்வரை அவதூறாக பேசிய விவகாரத்தில் சி.வி.சண்முகம் வழக்கை எதிர்கொண்டுதான்  ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இதில், 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை தொடர்பாக நடந்த போராட்டங்களில் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாகத் தமிழக அரசு சார்பில் 4 வழக்குகள் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கேட்டு சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மொத்தமுள்ள 4 வழக்குகளில் இரண்டு வழக்கை ரத்து செய்தார்.

தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என்று விமர்சித்த இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து அதனை எதிர்கொள்ள சி.வி.சண்முகத்துக்கு உத்தரவிட்டார்.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சி.வி.சண்முகம்.

அந்த மனுவில், “நான் நேரடியாக முதல்வரை விமர்சிக்கவில்லை. அரசை மட்டுமே விமர்சித்துள்ளேன். என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு வழக்குகளை எதிர்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, என் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சி.வி.சண்முகம் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (நவம்பர் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மாநில முதல்வருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசுவதா? முதல்வரை தரம் தாழ்த்தி பேசும் போது அவதூறு வழக்கு பதியப்படுவது இயல்பு. அவர் இந்த வழக்குகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது விமர்சனம் வைக்கும்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைபிடிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

இதற்கு சி.வி.சண்முகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும். அரசியலில் விமர்சனம் செய்வது இயல்பானது. ஒரு தவறான விஷயத்தை அரசு செய்யும் போது, அதை எதிர்க்கட்சிகள் என்ற முறையில் விமர்சிப்பது அவர்களது உரிமை. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவதூறு வழக்கு பதிவது என்பதை எப்படி ஏற்க முடியும்?” என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, “ஒரு மாநில முதல்வரை ஒருமையில் பேசுவது, தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது அவதூறாகும். அதனடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது 4 எப்.ஐ.ஆர்கள் போடப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், “ஏற்கனவே மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும். அனைத்து தரப்பினரும் வழக்கின் விவரங்களை சிறு குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஜனாதிபதிக்கு எதிரான கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் வாபஸ் : எஸ்.எஃப்.ஐ அறிவிப்பு!

நவம்பர் 26: அரசமைப்புச் சட்ட நாள்- பிசாசுகளை விரட்ட கோயிலை எரிப்பதா? 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel