அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அரசியல்

இஸ்லாமியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து பேசியதற்கு உச்ச நீதிமன்றம் இன்று (மே 9) கண்டனம் தெரிவித்துள்ளது. 

பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டது.

லிங்காயத் ஒக்கலிகா சமூகங்களுக்கு ஓபிசி பிரிவுகள் உருவாக்கப்படும் என்றும், ஒக்கலிகா சமூகத்துக்கு ‘2சி’ எனவும், லிங்காயத் மக்களுக்கு ‘2டி’ என்ற புதிய உட்பிரிவுகள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். 

முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் , மாநில அரசின் உத்தரவை ரத்து செய்தது. அதோடு 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எந்தவொரு முடிவையும் மே 9ஆம் தேதி வரை அரசு அறிவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தது. 

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் முஸ்லீம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக தொடர்ந்து பேசி வந்தனர். 

நேற்று மாலையோடு பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் இன்று இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “பிரச்சாரத்தின் போது 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக அமித்ஷா பெருமையாக பேசுகிறார்” என்றார். 

அப்போது, “நீதிமன்றத்தில் இவ்விவகாரம் இருக்கும் போது பொதுவெளியில் பேசுவது ஏன்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,

“மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று யாராவது சொன்னால், அது முற்றிலும் நியாயமானது.

மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது. அமித்ஷாவின் கருத்தின் உள்ளடக்கம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை” என்று வாதிட்டார். 

இதை விசாரித்த நீதிபதிகள் , “இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுவெளியில் அதுதொடர்பாக எப்படி பேசலாம்? 

வழக்கு விசாரணைக்காக நிலுவையில் இருக்கும் போது இப்படி பேசியது தவறு.

பொதுவெளியில் மக்கள் பிரதிநிதிகள் பேசுகிற போது கவனத்துடன் பேச வேண்டும். இடஒதுக்கீடு விவகாரத்தை அரசியலாக்க அனுமதிக்கவும் முடியாது” என்று கண்டனம் தெரிவித்தனர். 

இந்த வழக்கை ஜூலை மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

பிரியா

ஆசிரியர் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்த மாணவி!

கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார்?: கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Supreme Court condemns AmitShah
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

  1. அமித்ஷாவுக்கு கண்டனம் போதுமா?அவன் மீது நடவடிக்கை எடுக்கணும், மத அடிப்படை என்கிறான் இதற்காக சாதிகள் உருவாக்க வேண்டுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *