தேர்தல் பத்திரங்கள்.. எஸ்பிஐ வங்கிக்கு கெடு: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கிய நன்கொடையாளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்தில் நாளைக்குள் (மார்ச் 12) சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 11) கெடு விதித்துள்ளது.
தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து!
அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது. இந்த சட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இதன் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விருப்பமான கட்சிகளுக்கு ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கலாம்.
தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
தேர்தல் பத்திரம் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், மார்ச் 6-ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இப்போது வெளியிட இயலாது என்றும், அவற்றை வெளியிடுவதற்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில், எஸ்பிஐ வங்கி மீது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மூன்று மாதங்கள் கால அவகாசம்!
எஸ்பிஐ வங்கி தரப்பில் ஹரிஷ் சால்வ் ஆஜராகி, “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எங்களுக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும். புதிய தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை தற்போது எஸ்பிஐ நிறுத்தியுள்ளது. எங்களிடம் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், முழு செயல்முறையும் திரும்ப மாற்ற வேண்டியுள்ளது.
எங்களுடைய கோர் பேங்கிங் அமைப்பில் தேர்தல் பத்திரம் வாங்குபவரின் பெயர் மற்றும் அவர்களின் கேஒய்சி விவரங்களை டிஜிட்டல் முறையில் சேமிக்கவில்லை. நன்கொடை வழங்குபவர்களின் விவரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
பத்திரத்தை யார் வாங்கினார்கள் என்ற முழு விவரமும் எங்கிருந்து பணம் வந்தது எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற முழு விவரமும் உள்ளது. இப்போது பணம் வாங்கியவர்களின் விவரம் பத்திர எண்களுடன் சரியாக பொருந்துகிறதா என சரிபார்க்க வேண்டும் அதற்காக மூன்று மாதங்கள் அவகாசம் வேண்டும்” என்று வாதத்தை முன்வைத்தார்.
எஸ்பிஐ வங்கியிடம் நேர்மையை எதிர்பார்க்கிறோம்!
அதற்கு நீதிபதிகள், “நாங்கள் உங்களை மேட்சிங் செய்ய சொல்லவில்லை. தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள், பணம் வாங்கிய அரசியல் கட்சிகள் விவரங்கள் அனைத்தும் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறீர்கள். சீல் செய்யப்பட்ட அட்டையைத் திறந்து விவரங்களைக் கொடுத்தால் போதும். பிறகு ஏன் மூன்று வாரம் அவகாசம் கேட்கிறீர்கள்.
கடந்த 26 நாட்களில், என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்? எதுவும் செய்யவில்லை. எஸ்பிஐ-யிடம் இருந்து சில நேர்மையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பெயர்களைக் கொடுப்பதில் உங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. 26 நாட்கள் நீங்கள் எதுவும் செய்யவில்லை. தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் கேஒய்சி உங்களிடம் உள்ளது, நீங்கள் தான் நாட்டின் நம்பர் ஒன் வங்கி. இதுமிகவும் சுலபமான விஷயம். மூன்று வாரத்திற்குள் முடித்துவிடலாம்.
தேர்தல் பத்திரங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறீர்கள்.
எஸ்பிஐ தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை நாளைக்குள் (மார்ச் 12) எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தங்கள் இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலியல் வழக்கில் தண்டனை : ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!
தேர்தல் பத்திரங்கள் வழக்கு: எஸ்பிஐ கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!