தகுந்த காரணமில்லாமல், மசோதாக்களை ஆளுநர் ரவி நிறுத்தி வைப்பது ஏன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று (பிப்ரவரி 6) கேள்வி எழுப்பியுள்ளனர். supreme court asks question
பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் தலையீடு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ரவி காலதாமதம் செய்வதாக உச்சநீதின்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜே.பி.பரிதிவாலா, மகாதேவன் அமர்வில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆளுநரும் தமிழக அரசும் 24 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள், ஜே.பி.பரிதிவாலா, மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கான காரணத்தை சொல்ல அவர் கடமைப்பட்டுள்ளாரா? இல்லையெனில், அவர் ஏன் ஒப்புதலை நிறுத்தி வைத்துள்ளார் என்பதை மாநில அரசு எப்படி அறியும்?” என்று கேள்வி எழுப்பினர்.
தமிழக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “முதலில் ஆளுநர் தனக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் தன்மை குறித்து ஆராய வேண்டும். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது அதை திருப்பி அனுப்ப வேண்டும். ஆளுநர் சூப்பர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது.
ஆளுநர் ஒரு ஆலோசகர். இல்லையெனில், அரசு நிர்வாகத்தில் அவரது பங்கு அலங்காரமானது. மசோதாக்களுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை ஆளுநர் ரவி காரணங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
அப்போது நீதிபதிகள், “ஒரு மசோதாவைத் திருப்பி அனுப்பும்போது, ஆளுநர் ஒரு செய்தியையோ அல்லது குறிப்பையோ சேர்க்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
பிரிவு 200-ன் இந்த ஷரத்தில் “செய்தி” என்ற வார்த்தையை நாம் எவ்வாறு கருதுவது? “செய்தி” என்பதை ஆளுநர் மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராகேஷ் திவேதி, “ஆம். மசோதா ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது என்ற காரணத்தையே இந்த செய்தி என்ற வார்த்தை குறிப்பிடுகிறது” என்றார்.supreme court asks question