செல்லாத மசோதாவை குடியரசு தலைவருக்கு எப்படி அனுப்ப முடியும்? – ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Selvam

செல்லாத மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ரவி எப்படி அனுப்ப முடியும் என்று உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 10) கேள்வி எழுப்பியுள்ளது. Supreme Court asks question

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ரவி காலதாமதம் செய்வதாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் தலையிடுவதாகவும் தமிழக அரசு தரப்பில் இரண்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையானது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப்ரவரி 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஆளுநர் தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என நான்கு விதமான வாய்ப்புகள் ஆளுநருக்கு இருக்கிறது. அதன்படி தான் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அதற்கு நீதிபதிகள், “ஆளுநர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மசோதாக்களை நிறுத்தி வைத்துவிட்டு குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார்.

ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைத்தால் செல்லாது என்று முன்னர் வாதம் வைத்தீர்கள். அப்படியென்றால் செல்லாத மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் எப்படி அனுப்ப முடியும்?

ஒரு மசோதாவை ஏதாவது ஒரு காரணங்களுக்காக சட்டமன்றத்திற்கு ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். சட்டமன்றத்தில் மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்புகிறார்கள். இந்த முறை நிச்சயமாக ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்பதால் ஆளுநர் ஆண்டுக்கணக்கில் மசோதாவை கிடப்பில் போடுகிறாரா?” என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு குழுவில் ஆளுநர் தலையிடுகிறார். வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் வகையில் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை” என்றார்.

அப்போது நீதிபதிகள், “என்ன காரணத்திற்காக மசோதாவை திருப்பி அனுப்புகிறோம் என்று சொன்னால் தானே தேவையான மாற்றங்களை மாநில அரசால் செய்ய முடியும். மசோதா திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால் ஆளுநர் மனதில் என்ன இருக்கிறது என்பதை மாநில அரசுகள் எப்படி தெரிந்துகொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், “துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது என்ற முடிவு, ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும்” என்றார். Supreme Court asks question

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share