supreme court asks governor ravi bill sent to president
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ரவி நிறுத்தி வைப்பதாக முடிவெடுத்துவிட்டு பின்னர் ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று (டிசம்பர் 1) கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கால தாமதம் செய்வதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததும் நவம்பர் 13-ஆம் தேதி நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து நவம்பர் 18-ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட்டு 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றி திரும்ப அனுப்பப்பட்டது. நவம்பர் 28-ஆம் தேதி 10 மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.
நேற்று தான் இந்த தகவல் தமிழக அரசுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ஐ சீர்குலைப்பதாக அமைந்துள்ளது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகி, “ஆளுநர் சில பரிந்துரைகளுடன் மசோதாவை மீண்டும் அனுப்பினார். ஆனால் சட்டமன்றத்தில் அவரது பரிந்துரைகளை ஏற்கவில்லை. இதனால் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “2020-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். அப்போதே குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்கலாமே?
மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தால் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது. ஆளுநர் ரவி தரப்பில் குழப்பம் உள்ளது.
அவர் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசியலமைப்பின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவருடன் நாங்கள் வழக்கை கையாண்டு கொண்டிருக்கிறோம்.
மசோதா விவகாரத்தில் ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, குடியரசு தலைவருக்கு அனுப்புவது என மூன்று வாய்ப்புகள் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. இந்த வழக்கில் ஆளுநர் முதலில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறினார். பின்னர் ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்பினார்? மூன்று வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றை மட்டுமே அவர் பயன்படுத்த வேண்டும்.
மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்தால், அப்படியே கிடப்பில் போட முடியாது. சட்டம் ஆளுநருக்கு நான்காவது வாய்ப்பை வழங்கவில்லை.
ஆளுநர் தேர்தெடுக்கப்பட்ட பதவியில் இருக்கிறார். மத்திய அரசின் நியமன பிரதிநிதியான ஆளுநர் மூன்று வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே தீர்வு காண வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதல்வருடன் அமர்ந்து இதற்கு தீர்வு கண்டால் பாராட்டுவோம். இதற்காக முதல்வரை ஆளுநர் அழைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!
பத்திரப்பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம்: சிறப்பம்சங்கள் என்ன?
supreme court asks governor ravi bill sent to president