ஆளுநர் போட்ட தடை… உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு… இன்று விசாரணை!

Published On:

| By Selvam

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 17) விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய ஆறு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவியானது காலியாக உள்ளது.

இந்த பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க தமிழக அரசானது தேடுதல் குழுவை அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ரவி, யுஜிசி தலைவரையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

ஆளுநரின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், யுஜிசி தலைவரை சேர்த்து துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் ரவி தேடுதல் குழுவை அமைத்தார்.

தமிழக அரசும் யுஜிசி தலைவர் இல்லாமல் மூன்று உறுப்பினர்களை கொண்ட தேடுதல் குழுவை அமைத்து அரசாணை பிறப்பித்தது.

இந்தநிலையில், ஆளுநரின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநரின் உத்தரவு அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

செல்வம்

பொங்கல் பரிசு இன்னும் வாங்கலையா? – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஹெல்த் டிப்ஸ்: வொர்க் அவுட்டில் உடல்வலி … உடற்பயிற்சியை தொடரலாமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel