எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By christopher

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.

அதில், தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை முதலமைச்சராகப் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தை அவரது உறவினரான பி.சுப்பிரமணியம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருக்கிறது என கூறியிருந்தார்.

சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. அதன் விசாரணையில் உச்ச நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் ரூ4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு தொடர்பான இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் இருப்பதால் அது தொடர்புடைய விசாரணைகளும் முடங்கி உள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ் பாரதி கூடுதல் மனுத்தாக்கல் ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் அளித்தார்.

சிபிஐ விசாரணை ரத்து!

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 2) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share