அமைச்சர்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மேற்கொண்டு வரும் சூமோட்டா விசாரணை பற்றி இன்று (பிப்ரவரி 5) உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது.
‘இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறோம். எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதியே முடிவெடுப்பார்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புகளை தானாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மறு ஆய்வுக்கு எடுத்து விசாரித்து வந்தார்.
இதை எதிர்த்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.
இந்த வழக்கில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி, ‘நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த சூமோட்டை வழக்கை விசாரிக்கும் முன் தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்றாரா?’ என்று உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தது.
பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
“அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்து தானாகவே விசாரிப்பதற்கான அனுமதி கோரி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் 2023 ஆகஸ்டு 21 உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதம் ஆகஸ்டு 23 ஆம் தேதி தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.
இந்த கடிதத்தை தலைமை நீதிபதி ஆகஸ்டு 31 ஆம் தேதி பார்வையிட்டார். இதற்கிடையே நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் ஆகஸ்டு 23 ஆம் தேதியே வழக்கு விசாரணையைத் தொடங்கிவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று (பிப்ரவரி 5) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். மற்றும் தங்கம் தென்னரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, சித்தார்த் ஆகியோர்,
“சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரின் பதிலில் இருந்து… உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெறாமலேயே நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரித்து வருகிறார் என்பது உறுதியாகிறது.
தலைமை நீதிபதியின் அனுமதி பெறாமல் எப்படி அவர் சூமோட்டா வழக்கை விசாரிக்கலாம்? தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அவர் பார்க்காத நிலையில் தனி நீதிபதி வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது ஏன்? டிவிஷன் பெஞ்ச் மட்டுமே இதுபோன்ற சூமோட்டோ வழக்குகளை விசாரிக்க அதிகாரம் கொண்டவை” என்று வாதிட்டார்.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி, “இந்த வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதி எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போர்ட்ஃபோலியோ நீதிபதிதானே… அவருக்கு இதை விசாரிக்க அதிகாரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “தனி நீதிபதி போர்ட்ஃபோலியோ நீதிபதியாக இருப்பதால் சூமோட்டோ வழக்குகளை தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் விசாரிக்கலாம் என்று சட்டத்தில் இடமில்லை. மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர் இங்கே தலைமை நீதிபதிதான். அவரது அனுமதி பெற்றுத்தான் விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கு விசாரணை முடிவில் உச்ச நீதிமன்ற நீதிபதி, “தனி நீதிபதி குறித்து இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரத்தை மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே அனுப்புகிறோம். இந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியே முடிவெடுக்கட்டும்.
மெரிட் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுக்கலாம். இந்த வழக்கு மட்டுமல்ல… தனி நீதிபதி சூமோட்டாக விசாரித்த மற்ற வழக்குகளுக்கும் இது பொருந்தும்” என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். , தங்கம் தென்னரசு மட்டுமல்லாது பிற அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான சூமோட்டா வழக்குகளுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும். அனைத்து வழக்குகளையும் யார் விசாரிப்பது என்பதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுக்க இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
Video: ‘தெறி’ இந்தி டைட்டில் இதுதான்!
“தமிழ்நாட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன்” ஸ்பெயினில் ஸ்டாலின் பேச்சு!