இமாச்சல் பிரதேச மாநிலத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று சுக்விந்தர் சிங் சுகு இன்று (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், கர்நாடகா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 15 இடங்களுக்கான ராஜ்ய சபா எம்.பி தேர்தல் நேற்று (பிப்ரவரி 27) நடைபெற்றது.
இமாச்சல பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரையில், ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவ்ர் அபிஷேக் மனுசிங்வியும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜனும் போட்டியிட்டனர்.
அம்மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று கடந்த 2022-ஆம் ஆண்டு ஆட்சியமைத்தது. பாஜக 25 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், எளிதாக அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால், ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றி வாக்களித்ததையடுத்து பாஜக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி இமாச்சல் பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்யா சிங் இன்று ராஜினாமா செய்தார்.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் மேலிடம் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா ஆகியோரை நியமனம் செய்துள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக சுக்விந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து சுக்விந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நான் ராஜினாமா செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் ஒரு போர்வீரன். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பெரும்பான்மையை நிரூபிப்போம்.
காங்கிரஸ் அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக விளம்பரத்தில் சீனா கொடி: பிரதமர் மோடி காட்டம்!
கோடை விடுமுறையை குறிவைக்கும் சந்தானம்