பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு வழங்க வலியுறுத்தி ஜனவரி 2ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் இந்த ஆண்டு கரும்பு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கரும்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கரும்பு வழங்க அரசுக்கு உத்தரவிட கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 28) விடுத்துள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு செங்கரும்பைக் கொள்முதல் செய்யும் என்று நம்பிக்கையிலிருந்த விவசாயிகள் அரசின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகள் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ள அரசைக் கண்டித்தும்,
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பொங்கலுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது போல, தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,
விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பைக் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும்,
அதிமுக விவசாய பிரிவின் சார்பில் வரும் ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை நகரம் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.
பிரியா
சீனாவிலிருந்து மதுரை வந்தவர்களுக்கு பிஎப்7 பாதிப்பா?
திமுகவின் 23 அணிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!