இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை குறித்து அதிமுகவிற்கு திடீர் அக்கறை வந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றம் 2வது நாளாக இன்று (அக்டோபர் 10) காலை தொடங்கியது. அப்போது நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,
“ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக உரிய விளக்கங்களை முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் 10 மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், உடல்நலன் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோரின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு ஆராய வேண்டும் என்பதற்காக தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு 22.12.2021 அன்று அமைக்கப்பட்டது.
இந்த குழு தனது அறிக்கையினை 28-10-2022 அன்று அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையில் 264 ஆயுள் தண்டனை கைதிகள் மட்டுமே அக்குழுவால் முன் விடுதலைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்கள். அதனடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய பரிசீலனை செய்யும் பொருட்டு 11.8.2023 அன்று முதற்கட்டமாக 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு தொடர்புடைய கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அவர்களில் 20 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள். ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்ட உடன் அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பரிந்துரைக்கப்பட்ட மீதமுள்ள சிறைவாசிகளின் விடுதலை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு சார்பில் 13.9.2021-ல் அறிவித்தவாறு பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் அறிவுரை கழக திட்டத்தின் கீழ் 14 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும், மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணைகளின் படி 15 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும் ஏற்கனவே முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் 566 ஆயுள் தண்டனை கைதியின் நேர்வுகள் பரிசீலனை செய்யப்பட்டு 8.10.2023 வரை 335 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள்.
இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை. அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்த பார்க்கிறார்கள். அது போலியானது. இந்த விஷயத்தில் சட்டரீதியாக முறைப்படி தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்த பிரச்சனையை எடுத்து பேசினார். இஸ்லாமிய சிறைவாசிகளின் முன் விடுதலை குறித்து அதிமுக பேசுகிறபோது நான் கேட்கின்ற ஒரே கேள்வி நீங்கள் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த போது கண்ணை மூடிக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம்?
தருமபுரியில் பேருந்தில் பயணித்த மாணவிகளை உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு விடுதலை செய்த அதிமுக ஆட்சி ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் என்னுடைய கேள்வி.
ஆட்சியில் இருந்த போது இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அனைத்தையும் கண்மூடி ஆதரித்த அதிமுக இப்போது இஸ்லாமிய சிறைவாசிகளின் மீது காட்டக்கூடிய திடீர் பாசம் ஏன் என்று இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும். அதைவிட சிறுபான்மை சகோதர சகோதரிகளுக்கு நன்றாகவே தெரியும்” என்றார்.
முதல்வரின் பதிலுரைக்கு பின் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா!
கன்வின்ஸ் செய்த பிக்பாஸ்: உறுதியாக இருந்த பவா