ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் விக்கெட்டாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளது பாஜக. அதன் முதல் கட்ட தாக்குதலில் இருந்து தப்பித்து இப்போது சத்தீஸ்கரில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அழைத்த அமலாக்கத்துறை… மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அமலாக்கத்துறை ஆஜராக சம்மன் அனுப்பியது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை வகுப்பதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே கெஜ்ரிவாலின் அமைச்சரவை சகாவாக இருந்த துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அதே விவகாரத்தில்தான் கெஜ்ரிவாலையும் விசாரிக்க சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.
அவர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானால், விசாரணை என்று சில மணி நேரங்கள் கடத்தி பின் அவர் கைது செய்யப்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளது என்று கெஜ்ரிவாலுக்கு அவரது வழக்கறிஞர்கள் அறிவுறுத்தினர். இதை நன்கு அறிந்த அரவிந்த் கெஜ்ரிவால், நவம்பர் 2 ஆம் தேதி காலை, தான் அமலாக்கத்துறையிடம் ஆஜராகவேண்டிய நேரத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதாவது அமலாக்கத்துறைக்கு தான் எழுதிய கடிதத்தை வெளியிட்டார் கெஜ்ரிவால்.
“அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தெளிவற்றதாக இருக்கிறது. மாநிலத்தில் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கை தொடர்பான இந்த வழக்கில் ஒரு சாட்சியாக நான் அழைக்கப்பட்டிருக்கிறேனா அல்லது அல்லது சந்தேகத்திற்குரியவராக அழைக்கப்பட்டிருக்கிறேனா என்பது குறித்து சம்மனில் தெளிவாக இல்லை.
மேலும் நான் டெல்லியின் முதல்வர் என்ற வகையில் அழைக்கப்பட்டுள்ளேனா, அல்லது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேனா என்பதும் தெளிவாக இல்லை.
நான் எனது கட்சியின் தலைவர் மற்றும் நட்சத்திர பிரச்சாரகர் என்பதால், நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு பிரச்சாரப் பணிகளுக்காக செல்ல வேண்டியிருக்கிறது. டெல்லி முதல்வராகவும் நிறைய பணிகள் இருக்கிறது. எனவே தெளிவற்ற இந்த சம்மனை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். தெளிவில்லாத உங்கள் சம்மமனை ஏற்று என்னால் ஆஜராக இயலாது” என்று அதில் குறிப்பிட்டிருந்தார் கெஜ்ரிவால்.
5ல் மூன்றைக் குறிவைக்கும் கெஜ்ரிவால்
இதையடுத்து அவர் சத்தீஸ்கர் மாநில தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவும் கிளம்பிவிட்டார். அங்கே பஞ்சாப் முதல்வர் பகவத் மானோடு சேர்ந்து தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக இருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். தெளிவான அரசியல் மற்றும் சட்ட வியூகத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறார் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்து அவரை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் அவரது பணியை முடக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். இதை டெல்லி மக்கள் பல யு ட்யூப் சேனல்களின் மக்கள் கருத்து நிகழ்ச்சியில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தற்போது நடக்கும் ஐந்து மாநில தேர்தலில் தெலங்கானா, மிசோரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லை. ‘ஹிந்தி பெல்ட்’ எனப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்தான் தீவிர கவனம் செலுத்துகிறது.
இந்தியா கூட்டணிக்கு இழப்பா… பாஜகவுக்கு பாதிப்பா?
இன்னும் சொல்லப் போனால் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இருந்தபோதும் இந்த சட்டமன்றத் தேர்தலில் மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜகவை எதிர்த்துக் களம் காண்கிறது ஆம் ஆத்மி.
இப்படிப் பார்த்தால் ஆம் ஆத்மியால் காங்கிரஸ்தானே கோபப்பட வேண்டும்? தனக்கு எதிரான வாக்குகள் சிதறுவதால் பாஜகவுக்கு நன்மைதானே…பிறகு ஏன் பாஜக அரசு அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யத் துடிக்க வேண்டும்? இது எல்லாருக்கும் எழும் மேலோட்டமான சந்தேகம்.
ஆனால் பாஜக இதை இந்த தேர்தலுக்கானதாக மட்டும் பார்க்கவில்லை. இதுகுறித்து தேசிய பாஜக தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.
இந்தி பெல்ட்டில் ஆம் ஆத்மியின் வளர்ச்சி!
“பிரதமர் மோடி டெல்லியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் பாஜக தேசிய தலைமை அலுவலகத்துக்கு சென்று இரவு 8 மணி முதல் பின்னிரவு 2 மணி வரை தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன நிலைமை, என்ன முன்னேற்றம், என்ன பாதகம் என்பதை ஆய்வு செய்கிறார்.
அப்போதுதான் ஆம் ஆத்மி பற்றி அவருக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் அதிர வைப்பதாக இருக்கின்றன.
அதாவது இந்த 5 மாநில தேர்தலில் மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இந்தி பெல்ட் மாநிலங்களின் முடிவுகள்தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதாக இருக்கின்றன.
இந்த மூன்று மாநிலங்களிலும் சுதந்திரத்தில் இருந்து இப்போது வரை காங்கிரஸ்-பாஜக நேரடிப் போட்டியே இருக்கிறது. இந்த இரு கட்சிகள் தாண்டி வேறு பெரிய கட்சிகள் இங்கு இல்லை. ஆனால் கடந்த முறை கோவா, குஜராத் மாநிலங்களில் எவ்வாறு ஆம் ஆத்மி ஊடுருவியதோ அதேபோல இப்போது இந்த இந்தி பேசும் மாநிலங்களில் ஊடுருவ பெரும் திட்டம் வகுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமும் அடைந்து வருகிறது.
மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் இந்த மாநிலங்களில் காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்த மக்களின் மூன்றாவது சாய்ஸ் ஆக தன்னை மாற்றும் முயற்சியில் இருக்கிறது ஆம் ஆத்மி. இந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்று என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது, இப்போது வாங்கும் இடங்களை வைத்து மக்களவைத் தேர்தலில் மேலும் அதிக ஆதிக்கம் செலுத்துவது இதுதான் ஆம் ஆத்மியின் திட்டம். அதனால்தான் மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் சுமார் 250 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுகிறது ஆம் ஆத்மி.
இளம் வாக்காளர்களை குறிவைக்கும் கெஜ்ரிவால்
டெல்லி மாடல் பிரச்சாரத்தின் மூலம் பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்து அதிசயம் நிகழ்த்திய ஆம்ஆத்மி அதன் பின் குஜராத்திலும் நல்ல முன்னேற்றம் கண்டது. இப்போது இந்தி பேசும் மாநிலங்களான மபி, ராஸ்தான், சத்தீஸ்கரிலும் ஆம் ஆத்மி ஆழக் காலூன்றிக் கொண்டிருக்கிறது. சாதி ஆதிக்கம் நிறைந்த இந்த மூன்று மாநிலங்களிலும், ‘கடந்த 75 ஆண்டுகளாக உங்கள் ஊரில் பள்ளிக் கூடம் கட்டியிருக்கிறார்களா, கல்லூரி கட்டியிருக்கிறார்களா, தொழிற்சாலைகள் அமைத்திருக்கிறார்களா?’ என்றெல்லாம் அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பும் கேள்வி இளம் வாக்காளர்களை அவர் பக்கம் திருப்பியிருக்கிறது. அவர் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார். இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் வலுவாக இருந்த மாநிலங்களில் இப்போது ஆம் ஆத்மி கட்சி மெல்ல தலையெடுத்து வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது பிரச்சாரத்தில், “டெல்லியில் முதலில் இரு கட்சிகள்தான் இருந்தன. அந்த இரு கட்சிகளும் தொடர்ந்து மக்களுக்கு துரோகம் இழைத்ததால், மக்கள் ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்தனர். டெல்லியைப் போலவேதான் நாடு முழுதும் அவர்கள் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். அதனால் மக்கள் ஆம் ஆத்மியை நம்பி வருகிறார்கள்” என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறார்.
இதை பாஜக முழுமையாக விரும்பவில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் எதிர்காலத்தில் பாஜகவுக்கு வலுவான எதிரியாக ஆம் ஆத்மி அமைந்துவிடுமோ என்ற அச்சம் பாஜகவுக்கு இருக்கிறது. அதனால்தான் இந்த சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திரமாக தேர்தல் பணியாற்ற முடியாமல் அவரை முடக்கிவிட திட்டம் தீட்டுகிறது.
இந்தத் தகவல்களை எல்லாம் அறிந்த மோடி எப்படியாவது கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் சிறையில் அடைக்கப்படுவதால் ஆம் ஆத்மிக்கு கிடைப்பது சிறு லாபம்தான். ஆனால் கெஜ்ரிவாலை வெளியே விட்டால் இந்த 3 மாநில தேர்தல் களத்தின் பிரச்சாரப் போக்கையே மாற்றிவிடுவார் என்ற பயம்தான் மோடிக்கும் பாஜகவுக்கும் வந்திருக்கிறது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த பின்னணியில்தான் அரவிந்த் கேஜ்ரிவாலை சிறையில் அடைக்க அடுத்தடுத்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சம்மனுக்கு அடுத்து என்ன?
அதாவது அமலாக்கத்துறை சட்டப்படி ஒரு தனிநபர் ED சம்மனை மூன்று முறை புறக்கணிக்க முடியும். அப்படி மூன்று முறை புறக்கணித்தால் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை நீதிமன்றத்துக்கு சென்று அவர் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பெறலாம். அதற்கு எதிராக அவர் கோர்ட்டுக்கு செல்ல முடியும். கோர்ட்டில் அந்த தனி நபருக்கு எதிராக உத்தரவு வந்த பின் அவர் கைது செய்யப்படலாம்.
அல்லது அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பினால் அதை எதிர்த்து கெஜ்ரிவால் நீதிமன்றம் செல்வார். எனவே இப்போதைக்கு கூடிய விரைவில் அவரை கைது செய்வது எப்படி என்ற தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்ற வகையிலும், அந்த இழப்பு ஆம் ஆத்மி கட்சி நிதிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற வகையிலும் கெஜ்ரிவாலை முதல்வர், ஆம் ஆத்மி கட்சி தலைவர் என்ற இரு வகையிலும் கைது செய்ய அடுத்தடுத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறையும் பாஜகவும்.
ஆனால் கெஜ்ரிவாலோ தனது சகாவான பஞ்சாப் முதல்வர் பகந்த் மானுடன் சேர்ந்து இந்தி பேசும் மாநிலங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.
-ஆரா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இரவில் வேகமாக செல்லலாமா?: போக்குவரத்து கூடுதல் ஆணையர் பேட்டி!
இன்றும், நாளையும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!