சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி”மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையேயான போர் உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது.
இதனால் அந்நாட்டில் வாழும் 3000 இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி முதற்கட்டமாக 500 இந்தியர்களை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் சூடான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “சூடானில் உள்நாட்டு போர் காரணமாக நிலவிய சிக்கலான நிலை தற்போது முன்னேற்றமடைந்து வரும் நிலையில்,
இந்திய குடிமக்கள் சூடானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய விமானப்படை விமானம் மற்றும் இந்திய கடற்படை கப்பல்கள் சூடான் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதலளிப்பதாக உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சுமார் 400 பேர் வரை சூடானில் சிக்கித் தவித்து வருவதாகவும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பது குறித்து பிரதமர் மோடி அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டு வர விரும்புகிறேன்.
சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் முதல் தொகுதி ஐ.என்.எஸ் சுமேதா என்ற கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிடமிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது.
மேலும் இது தொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் குறித்த தகவல்களை பெறுவதற்கு, அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும்,
வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
“ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணியானது சூடானில் சிக்கித் தவிக்கும் தங்கள் உற்றார் உறவினர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகக் காத்திருக்கும் அனைத்து இந்தியர்களின் குடும்பங்களுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என நான் நம்புகிறேன்.
இந்திய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கத் தயார் நிலையில் இருப்பதாக மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சர்வதேச நிகழ்வுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணைக்கு தடை!
‘அசுத்தமா இருக்கு, ஆக்சிஜன் இல்ல’ : அரசு மருத்துவமனையில் டிஎம்எஸ் ஆய்வு!
