சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா?: 4 முக்கிய காரணங்கள்!

அரசியல்

திமுகவில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதற்கு 4 காரணங்கள் சொல்லப்படுகின்றன.

திமுகவின் தலைமைக் கழக நிர்வாகியாகக் கருதப்படும் துணைப் பொதுச் செயலாளர் பதவி என்பது கெளரவமான பதவி மட்டுமல்ல, தலைமைக் கழகத்துக்கான உயர்பொறுப்புகளுக்குச் செல்வதற்கான நுழைவாயிலும்கூட.

அப்படிப் பார்க்கையில் திமுகவில் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகிய ஐந்து துணைப் பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.

இதில் விருதுநகரில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்துகொள்ளாததும், அவர் தம்முடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்திருப்பதாக எழுந்திருக்கும் தகவலும்தான் திமுக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியின் சீனியர்களில் முக்கியமானவர். அவர், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் நெடுங்காலம் பயணித்தவர்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் கலைஞரோடு அதிகம் பயணித்தவர். இரண்டு கட்சிகளிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

கொடுமுடியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.ஜி.ஆர் மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டு 1977இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அவரது அமைச்சரவையிலேயே 1978 முதல் 1980 வரை கைத்தறித் துறை அமைச்சராக இருந்தார். பின்னர், 1980இல் திமுகவில் இணைந்து 1984இல் திமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1989 தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, கலைஞர் அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார்.

பின்னர், 1991ம் நடைபெற்ற தேர்தலில் வெள்ளக்கோவில் தொகுதியில் தோல்வியடைந்தார்.

இதற்கிடையே, சுப்புலட்சுமி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியதாக, தடா சட்டத்தின்கீழ் கணவர் ஜெகதீசனுடன் 1992ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 11 மாதம் திருச்சியில் சிறை தண்டனை அனுபவித்தார்.

அடுத்து, 1993ம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதற்கடுத்து 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அடுத்து, 2001 சட்டமன்றத் தேர்தலில் அதே மொடக்குறிச்சியில் தோல்வியடைந்தார்.

ஆனால், 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.

இந்த நிலையில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், தனது தோல்விக்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 2 ஒன்றிய செயலாளர்கள்தான் காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதே கட்சி தலைமையிடம் புகார் செய்தார்.

ஆனால் திமுக, அவருடைய கடிதத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றிபெற்ற முத்துசாமி, திமுக தலைமையிடம் அதிகம் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.

அதன்பயனாக வீட்டுவசதி துறை அமைச்சரான முத்துசாமி, முதல்வர் ஸ்டாலினின் பார்வையில் ’பவர் ஃபுல்’ மனிதராகவும் தெரிய ஆரம்பித்தார். அவருடைய பாராட்டு மழையிலும் நனைய ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில்தான் ஒன்றியம் முதல் மாவட்டம் வரையிலான திமுகவின் கழக அமைப்புரீதியிலான தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் 25 பொறுப்பாளர்களுக்கான பதவிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்ன 2 ஒன்றியச் செயலாளர்களும் இருந்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் மூன்று நாள் பயணமாக கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 25ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் திமுக விழாக்களில் கலந்துகொண்டார்.

அந்த விழாக்களைச் சிறப்பாகச் செய்திருந்தமைக்காக அமைச்சர் முத்துசாமியை மேடையிலே கட்டிப்பிடித்து முத்தம் தந்து வாழ்த்தினார்.

பின்னர், ஸ்டாலின் விழா முடிந்து காரில் ஏறும்போது, அமைச்சர் முத்துசாமி ‘கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 2 ஒன்றியச் செயலாளர்களின் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும்’ என்று துண்டுச்சீட்டைத் தந்தாராம்.

உடனே ஸ்டாலின், அப்போதே போனில் தலைமை நிலைய செயலாளர் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டு, கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 2 ஒன்றியச் செயலாளர்களின் பொறுப்புகளை உடனே அறிவிக்க உத்தரவிட்டார்.

இதனால் மேலும் நொந்துபோன சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது துணைபொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிவைத்தார்.

இந்நிலையில், ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசனை சமாதானப்படுத்த பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் சொல்லியுள்ளார்.

இதனால்தான் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய சுப்புலட்சுமி, ’மீண்டும் தாம் அனுப்பவில்லை’ என்று விளக்கம் தந்துகொண்டு இருக்கிறார்.

ஜெ.பிரகாஷ்

விரைவில் திமுக பொதுக்குழு: மு.க.ஸ்டாலின் ஆலோசனை

+1
1
+1
1
+1
0
+1
3
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *