திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், அக்கட்சியிலிருந்து விலகியிருப்பதுதான் தற்போது எல்லோரும் பேசப்படும் செய்தியாக இருக்கிறது.
இதுகுறித்து அவர் நேற்று (செப்டம்பர் 20) வெளியிட்டிருந்த அறிக்கையில், “கடந்த 2009ல் எனது எம்பி., பதவி முடிந்ததும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கட்சி பணியை மட்டும் தொடர்வதாக அப்போதைய தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தேன்.
தொடர்ந்து 2021 தேர்தலில் அரும்பணியாற்றி முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இவர் மக்கள் போற்றும் வகையில் ஆட்சி புரிந்து வருகிறார்.
இந்த மனநிறைவோடு நான் எனது நீண்டகால ஆசையை நிறைவேற்றி கட்சி பொறுப்பில் ( திமுக துணை பொது செயலாளர் ) இருந்து விலகிக் கொள்கிறேன்.
இதற்கான கடிதத்தை ஆகஸ்ட் 29ம் தேதி ஸ்டாலினுக்கு அனுப்பிவைத்து விட்டேன்” என அதில் தெரிவித்திருந்தார். அப்படியென்றால், அவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இன்றுடன் (செப்டம்பர் 20) 23 நாட்கள் ஆகின்றன. இந்த இடைப்பட்ட நாட்களில் நடந்தது என்ன?
’தம்முடைய தேர்தல் தோல்விக்கு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 2 ஒன்றியச் செயலாளர்கள்தான் காரணம்’ என சுப்புலட்சுமி ஜெகதீசன், தேர்தல் முடிந்தவுடனேயே திமுக தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதை அப்போது திமுக தலைமை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்ற திமுகவின் கழக அமைப்புரீதியிலான தேர்தலில் 23 பேருடைய பொறுப்புகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இதில், தாம் புகார் வாசித்த அந்த 2 பேருடைய பதவிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால், அமைதியாகவே இருந்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
ஆனால், ஆகஸ்ட் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு மற்றும் திமுக விழாக்களைச் சிறப்பாகச் செய்திருந்தமைக்காக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் முத்துசாமியை மேடையிலே கட்டிப்பிடித்து முத்தம் தந்து வாழ்த்தினார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு காரில் ஏறிய ஸ்டாலினிடம், அமைச்சர் முத்துசாமி தந்த துண்டுச்சீட்டால், எல்லாம் மாறிப்போனது.
‘கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 2 ஒன்றியச் செயலாளர்களின் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும்’ என அவர் கொடுத்த துண்டுச்சீட்டுக்கு, அப்போதே போனில் தலைமை நிலைய செயலாளர் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்ட ஸ்டாலின், அந்த பொறுப்புகளை உடனே அறிவிக்க உத்தரவிட்டார்.
அமைச்சர் முத்துசாமி வைத்த கோரிக்கைக்குப் பிறகு, அவர்களுக்கு பொறுப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டதால், கடும் அதிருப்திக்கு ஆளானார் சுப்புலட்சுமி ஜெகதீசன். அதற்குப் பிறகு அவருடைய கணவர் ஜெகதீசன், திமுகவை தொடர்ந்து விமர்சிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில்தான், ‘சுப்புலட்சுமி ஜெகதீசன், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
‘ஆனால் தேர்தல் நேரத்தின்போது சீனியரான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்குத்தான் சீட் வழங்க வேண்டும் என ஐபேக் சர்வே சொன்ன முடிவையேற்று தலைமையும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது.
அந்தத் தேர்தலில் அவர் ஒழுங்காய் வேலை செய்யவில்லை. ஆனாலும் அவருடைய தேர்தல் செலவுக்கும் நம் தலைமைதான் செலவு செய்தது. அப்படி, அவர் தேர்தலில் ஒழுங்காக வேலை செய்யாமல், கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர்கள் மீது புகார் சொல்வதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அதனால் அவர் அனுப்பிய புகார் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ள வேண்டாம். அமைதியாக இருங்கள். அத்துடன், திமுகவைப் பற்றியும் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்துவருகிறார்.
சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை எழுதிவருகிறார். அதனால், இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம்’ என தலைமை சொல்லியிருக்கிறது.
இத்தனை நாட்கள் ஆகியும், தம்முடைய விஷயத்தில் திமுக தலைமை அமைதியாக இருந்ததால், மிகவும் நொந்துபோயுள்ளார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
மேலும், தாம் அனுப்பிய புகார் கடிதத்துக்கு அந்த ஒன்றியச் செயலாளர்கள் மீது தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு பொறுப்பு வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டதால் இன்னும் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
இந்தநிலையில்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா? 4 முக்கிய காரணங்கள்!
150 கி.மீ வேகத்தில் பைக் சாகசம்: டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு!