தேசத் தந்தையா சவுக்கு சங்கர் ? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

அரசியல்

“சவுக்கு சங்கர் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டியதற்கான தேவை என்ன?” என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் இன்று (மே 25) கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண் காவலர்களை இழிவுபடுத்திய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சவுக்கு சங்கர் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

“அதிகாரமிக்க நபர்கள் என்னை சந்தித்து இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்ததால் அவசரமாக விசாரித்தேன். சவுக்கு சங்கர் வழக்கில் விதிகள் முறையாக பின்பற்றாமல் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதால், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்கிறேன்” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளித்ததற்கு பிறகு வழக்கை விசாரிக்கலாம் என்று நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.

சவுக்கு சங்கர் வழக்கின் தீர்ப்பு குறித்து சுப.வீரபாண்டியன் தனது முகநூல் பக்கத்தில்,

“உயர்நீதிமன்றத்தில், மிக வியப்பான ஒரு நீதிமன்ற நடைமுறையை நாம் பார்க்க நேர்ந்துள்ளது. இது விடுமுறைக் காலம். வாரத்திற்கு இரண்டு முறைதான் நீதிமன்ற அமர்வுகள் இருக்கும். ஒன்று மனு அனுமதிக்காக ( admission). இன்னொன்று மனுக்கள் மீதான விசாரணைக்காக.

நேற்று முன்தினம் விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் 40 வழக்குகள் வந்துள்ளன. அவற்றுள் 15 வழக்குகள் குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு கேட்டு வந்தவை.

முதல் 14 மனுக்களை நீதிபதிகள் ஜி .ஆர் . சுவாமிநாதன், பி. பி. பாலாஜி இருவரும் ஒத்தி வைத்துவிட்டனர். அரசின் பதில் மனு வந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.

ஆனால் 15 ஆவது மனுவை மட்டும் உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், மதியம் 2.30 மணிக்குள் எல்லா ஆவணங்களையும் அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆணையிட்டார். அந்த மனு சவுக்கு சங்கருக்காக அவருடைய தாயார் கொடுத்திருந்த ஒன்று.

14 மனுக்களை முறைப்படி தள்ளி வைத்த உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கர் தொடர்பான மனுவை மட்டும் ஏன் உடனே எடுத்துக் கொண்டது என்பது நம்மைப் போன்ற பாமரர்களுக்குப் புரியவில்லை. ஒருவேளை காந்தியாருக்கு அடுத்து உருவாகி இருக்கும் இரண்டாவது தேசத் தந்தையாக சவுக்கு சங்கர் இருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது.

நீதியரசர் சுவாமிநாதன், தான் சொன்னபடி மதியமே வழக்கை எடுத்துக் குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாகவும் சொல்லிவிட்டார். ஆனால், அந்த அமர்வில் உடன் இருந்த இன்னொரு நீதிபதி பாலாஜி அவர்கள் அதனை ஏற்கவில்லை. அரசின் பதில் வந்த பிறகுதான் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அதனால் இப்போது அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வளவு அவசரம் அவசரமாகச் சவுக்கு சங்கர் வழக்கை எடுத்துக் கொண்டு தீர்ப்பும் வழங்கிட வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? இதற்கு நம் மதிப்பிற்குரிய நீதிபதி சுவாமிநாதன் அவர்கள், நீதிமன்றத்திலேயே விடையும் சொல்லிவிட்டார்.

சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய இருவர், நீதிபதியவர்களை அவர் அறையில் தனியாகச் சந்தித்து, இந்த வழக்கை அவசரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்களாம். எனவே அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், உடனே எடுத்துத் தீர்ப்பும் சொல்லிவிட்டாராம்.

இப்போது நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. தனிப்பட்ட முறையில் நீதிபதி அவர்களை, அவர் அறையில் தனியாகச் சந்தித்து, நீதிமன்ற நடைமுறையில் குறுக்கிட்டு, தங்கள் செல்வாக்கைச் செலுத்தி, நீதிபதிக்கே யோசனை அல்லது மிரட்டல் கொடுத்த அந்த இரண்டு பேர் யார்? அவர்களின் பெயர்களை நீதிபதி ஏன் வெளிப்படையாகச் சொல்லவில்லை? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை?

நமக்கு இன்னொரு கேள்வியும் தோன்றுகிறது. இரண்டு பேர் தனியாகச் சந்தித்து வழக்கை எடுக்காதீர்கள் என்று சொன்னதற்காக, அதனை அவர் கையில் எடுப்பார் என்றால், இனி அடுத்தடுத்த வழக்குகளில் இரண்டு பேர் தனியாகச் சந்தித்து குறிப்பிட்ட இந்த வழக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னால் அல்லது மிரட்டினால், உடனடியாக நீதிபதி விசாரணையை நிறுத்தி விடுவாரா?

நீதிமன்ற நடைமுறை என்பது, நீதிபதியைத் தனியாகச் சந்தித்து யாரோ சிலர், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அமையுமா என்பதும் நம் போன்ற பாமரர்களுக்குப் புரியவில்லை.

மாண்பமை நீதிபதியவர்கள் நம்மைப் போன்ற எளியவர்களின் இந்த ஐயங்களுக்கு விடை தந்து, நீதியைக் காப்பாற்றுவார் என்று நம்புவோமாக” என்று சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயலலிதா இந்துத்துவ தலைவரா? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!

துள்ளல் அஜித்தை காட்டிய ‘உல்லாசம்’!

+1
0
+1
1
+1
2
+1
10
+1
1
+1
1
+1
0

1 thought on “தேசத் தந்தையா சவுக்கு சங்கர் ? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

  1. நீதி அரசர் GR Sசங்கர் விஷயத்தில் தானாக முன் வந்து இடைக்கால தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசின் வாதத்திற்கு காத்திருக்கிறது. இதைத்தான் உச்சநீதி மன்றமும் எதிர்பார்க்கும். இரண்டு விதமான தீர்ப்பு பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *