தன் மீது பரப்பும் அவதூறுகளை நிறுத்தாவிட்டால் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஸ்டார் தொகுதியான மதுரையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் சிட்டிங் எம்.பி சு.வெங்கடேசனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சரவணனும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு பைனாகுலரோடு வந்த சரவணன், “சு,வெங்கடேசன் இங்கு செய்த திட்டங்கள், பணிகள் கண்ணில் தென்படுகிறதா என்பதை பார்ப்பதற்காக பைனாகுலரோடு வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த சரவணன், தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.17 கோடியில் ரூ.5 கோடியை மட்டுமே வெங்கடேசன் பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து சு,வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மதுரைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன் வாக்குச் சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலிப் பொருளாக மாற்றி விடுகின்றன.
மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் ஏதும் இல்லாததால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
உண்மையில் தேர்தல் பிரச்சாரம் என்பது கருத்தியலும் களச் செயல்பாடும் முன்வைக்கப்படும் மேடைகள். அந்த மேடைகள் ஆரோக்கியமான விவாதமாக மாற்றுவதே பண்பட்ட அரசியல் .
தற்போது சரவணன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “வெங்கடேசன் எம்.பி நிதிக்கான 17 கோடி ஒதுக்கீட்டில் 5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் 12 கோடியை பயன்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.
அவர் பைனாகுலர் மூடியைத்தான் திறக்காமல் விட்டுவிட்டதாய் செய்திகள் வெளிவந்தன. உண்மையில் அவர் தனது சொந்தக் கண்களைக் கூட திறக்க மறந்து விட்டாரா ? என்ற கேள்வி எழுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்ட காலத்திலும் கூட களச் செயல்பாட்டினாலும் , விரைவான தலையீடுகளினாலும் கோவிட் களத்தில் மதுரை மக்களைக் காக்க செய்த பணிகளை அருகிருந்து பார்த்தவர் தான் அன்றைய திருப்பரங்குன்றத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடியில் 16 கோடியே 96 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக 100 சதவீதம். ஒட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம் .
எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வளவு அதிகமான பணிகளை செய்திருப்பதே ஒரு சாதனை தான். ஆனால் மரியாதைக்குரிய மருத்துவர் சரவணன் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் .
அரசு ராஜாஜி மருத்துவமனை பெருந்தொற்று நோய் சிகிச்சை, அனைத்து அரசு நூலகங்களிலும் மாணவர் போட்டித் தேர்வுக்காக நூல்கள் , மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுப்புற உயர்மின் கோபுர விளக்குகள் , இளைஞர்களுக்கான கபடி மைதானங்கள் என இந்தியாவிற்கு முன்னுதாரணம் சொல்லும் பல பணிகளை செய்துள்ளோம்.
உண்மை இப்படி இருக்க, 5 கோடி மட்டுமே செலவழித்துள்ளோம். மீதப்பணத்தை செலவழிக்கவில்லை எனக்கூறுவது அவதூறுகளை தாண்டி வேறு எதுவும் இல்லை. அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. ஆனால், தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அந்த கண்ணு, உதடு, மூக்கு… அவங்ககிட்ட என்னமோ இருக்கு: விஜய் தேவரகொண்டா!
இவிஎம் மெஷின்… சந்தேகம் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி