’திசை திருப்பும் நிர்மலா சீதாராமன்… வாபஸ் பெற வேண்டும்’: சு.வெங்கடேசன்

Published On:

| By Monisha

su venkatesan slams nirmala sitharaman

மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த பாதிப்பிற்கு காரணம் வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்காதது தான் காரணம் என்று அரசு குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ”வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 12 ஆம் தேதி முதல் கனமழை, மிக கனமழை குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கருத்துக்களைத் திரும்ப பெற வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர்.

அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க இரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்தி வைத்தாரே எப்படி? கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?

அன்றைய தினம் கடும் மழையால் தென்மாவட்டங்களில் பல இரயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என இரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவுப் பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?

தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா?

நிதியமைச்சர் அவர்களே! மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள்.

இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டு பெறுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஒரு பந்துக்கு ரூபாய் 7.60 லட்சம்… இதெல்லாம் நியாயமே கெடையாது… முன்னாள் வீரர் காட்டம்!

”மரியாதை குறைவாக எந்த வார்த்தையும் பேசவில்லை” : உதயநிதி ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share