சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம்: மார்க்சிஸ்ட் வேட்பாளர்களின் பின்னணி என்ன?

Published On:

| By christopher

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி மீண்டும் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அம்மாவட்டச் செயலாளருமான ஆர்.சச்சிதானந்தம் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  இரு வேட்பாளர்களின் பின்னணி  என்ன?

CPM announces Su Venkatesan for Madurai, Sachidanandam for Dindigul

சு.வெங்கடேசன்  எம்.பி :

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டி தான் சு.வெங்கடேசனுக்கு சொந்த ஊர். மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவியும், யாழினி, தமிழினி என்று இரு மகள்களும் உள்ளனர்.

கல்லூரி காலத்தில் இருந்தே  35 வருடங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர் கடந்த 32 வருடங்களாக முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமான சு.வெங்கடேசன், மாநில தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

காவல்கோட்டம் என்ற தனது முதல் நாவலுக்காக கடந்த 2011ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதினை  பெற்றார். மேலும்  இவர் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ வரலாற்று நாவலுக்காக முன்னாள் முதல்வர் கலைஞரிடம் பாராட்டு பெற்றார். ஆனந்த விகடனில் தொடராக வந்த அந்த நூல் வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரையில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிட்டார். சுமார் 14.41 லட்சம் வாக்குகள் பெற்ற இவர், 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார் சு.வெங்கடேசன். மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் நடத்தி, சுமார் 26,000 பேரின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார்.

குறிப்பாக இளைஞர்களுக்கான மத்திய அரசுத் தேர்வுகளில் நடைபெறும் குளறுபடிகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும்படி கோரிக்கை விடுத்து வருகிறார்.

மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க கோரியும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்டி முடிக்கவும் தொடர்ச்சியாக அவர் குரல் எழுப்பி வருகிறார்.

தோப்பூரில் 221 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை எல் அண்ட் டி நிறுவனம் கடந்த வாரம் வாஸ்து பூஜையுடன் தொடங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மதுரை தொகுதிக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் சு.வெங்கடேசன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி.

ஆர்.சச்சிதானந்தம்:

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் கிராமம் கட்டச்சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.சச்சிதானந்தம். இவருக்கு கவிதா என்ற மனைவியும், வைசாலி (திருமணமானவர்), ஆர்.எஸ்.மிருணாளினி (10ஆம் வகுப்பு மாணவி) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

பி.எஸ்.சி பட்டதாரியான இவர் 37 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும், 30 ஆண்டுகள் கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.

1987ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணைச் செயலாளராகவும், திண்டுக்கல் நகரத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

1992ஆம் ஆண்டு டிஒய்எஃப்ஐ எனப்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து, 1994-2002 வரை மாவட்டச் செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும் தனது 26 வயதில் காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், 1996-2006 வரை 2 முறை எந்தவித ஊழல் குற்றச்சாட்டுமின்றி மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.

இதற்கிடையே கட்சியில் 2004-2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தாலுகா செயலாளராகவும், அதன் பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்டச் செயலாளர், மாநில துணைச் செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அப்போது கூடலூர், லந்தக்கோட்டை, கருங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களிலிருந்து சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில மீட்பு போராட்டத்தை நடத்தினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தான் தற்போது திண்டுக்கல் மக்களைவை தொகுதி வேட்பாளராக ஆர்.சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

விஷ்வகுருவா? மவுனகுருவா? : மோடியை சாடிய ஸ்டாலின்

Rain Update: தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மழை உண்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel