கோவையில் நடந்த பிரதமர் ரோடுஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விவகாரத்தில் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பிரதமர் மோடி ரோடுஷோ நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அந்த பள்ளிக்கு எதிராக சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் புகழ் வடிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி நிர்வாகம் மீது காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஏப்ரல் 4) விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி தரப்பில், “பிரதமர் நிகழ்ச்சியின் காரணமாக மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தோம். இந்நிலையில் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்படாத மாணவர்கள் மட்டுமே பேரணிக்கு சென்றனர். அதற்கு பள்ளி நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்” என்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், “மாணவர்கள் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்திய பின்னரே புகார் அளிக்கப்பட்டது. பிரதமர் நிகழ்ச்சியின் போது மாணவர்களுடன் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பங்கேற்று இருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், “அரசு நிகழ்ச்சியில் பிரதமர் என்ற முறையில் மோடி கலந்து கொண்டிருந்தால் அதில் பள்ளி குழந்தைகள் பங்கேற்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்றது தவறு. குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், பள்ளி குழந்தைகள் சென்றது தொடர்பாக பெற்றோர்கள் எதுவும் புகார் அளித்துள்ளார்களா? நிகழ்ச்சியில் இருந்த போது பள்ளி ஆசிரியர்கள் யாரும் உடன் இருந்தார்களா? இந்த வழக்கில் சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும்? என்று கேள்வி எழுப்பி காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“விரைவில் செந்தில் பாலாஜி வெளியே வருவார்” : கரூரில் உதயநிதி உறுதி!
வருமானம் வெறும் ரூ.680 தான்… : கணக்கு காட்டிய மத்திய அமைச்சர்!