வங்கதேசத்தின் நாடாளுமன்றத்தை இன்று(ஆகஸ்ட் 6) மதியம் 3 மணிக்குள் கலைக்கவில்லை எனில் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று பாகுபாட்டிற்கு எதிரான மாணவர் இயக்கத்தின் தலைவர் நஹித் இஸ்லாம் தெரிவித்திருந்த நிலையில் ஜனாதிபதி முஹம்மத் ஷஹபுத்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
நஹித் இஸ்லாம் வெளியிட்ட காணொளியில் “ நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி முஹம்மத் ஷஹபுத்தின் உறுதியளித்திருந்தார். ஆனால் இன்னமும் பாசிச ஹசீனாவின் நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை. இன்று மதியம் 3 மணிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை என்றால் ‘புரட்சிகர மாணவர்கள்’ தயாராக இருங்கள் ” என்று சொல்லியிருந்தார்.
மேலும் அவர் “இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற டாக்டர் முகம்மது யூனுஸை தங்களது அமைப்பு தேர்வு செய்துள்ளது. அதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். அவரைத் தவிர வேறு யாரின் தலைமையும் மாணவர்கள் ஏற்கமாட்டார்கள்.” என்றார்.
இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆசிப் மஹ்மூத், முகநூல் பதிவு ஒன்றில் இடைக்கால அரசாங்கம் உருவாகும் வரை அமைதியான நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும், சுதந்திரத்தை அடைவதை விட அதைப் பாதுகாப்பது கடினம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதாக வங்கதேச ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஷிப்லு சமன் அறிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா வீட்டிற்கு தீ வைப்பு!
“ஷேக் ஹசீனா இனி வங்கதேசம் செல்ல மாட்டார்”: மகன் சஜீப் வாசெத் ஜாய் பேட்டி!