ஆதவ் ஆர்ஜூனாவுக்கு விசிகவுக்குள் வலுக்கும் எதிர்ப்பு!

அரசியல்

திமுகவுடன் கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு தொடர்பாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்துக்கள், திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று (செப்டம்பர் 24) அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக ஏற்கெனவே கூட்டணிக்குள் பலத்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே இப்போது துணை முதல்வராக ஆகும் போது, 40 வருஷமாக அரசியலில் இருக்கின்ற எங்கள் தலைவர் திருமாவளவன் முதலமைச்சராகவோ, துணை முதலமைச்சராகவோ ஆகக்கூடாதா?’ என ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது. பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறிவிட்டதால், சிறுபான்மையினரின் வாக்குகள் பிரியும். கூடவே புது வரவுகளும் இருப்பதால் பெரும்பான்மைக்கு மிக அருகில் எம்.எல்.ஏக்களை பெற்று, கூட்டணி கட்சிகளை அரவணைத்திடும் நிர்பந்தம் நிச்சயம் ஏற்படும். வடமாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது” என்று பேசியிருந்தார்.

ஆதவ் அர்ஜூனாவின் இந்த கருத்து திமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா பதிலளித்து பேசுகையில், “விசிக கட்சியில் புதிதாகச் சேர்ந்திருக்கின்ற ஒருவர் கொள்கைப் புரிதலின்றி பேசியிருப்பது கூட்டணி அறம் மற்றும் அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. எனவே இடதுசாரி சிந்தனையில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள திருமாவளவன் இந்தக் கருத்தை  நிச்சயம் ஏற்க மாட்டார்.  பா.ஜ.க.விற்கு துணை போகும் அளவிற்கு இது போன்ற குழப்பத்தை விளைவிக்கும் கருத்துச் சொல்வதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திருமாவளவன் நிச்சயமாக இந்தக் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுப்பார்” என்று ஆ. ராசா தெரிவித்தார்.

இதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது, முதல்வர் ஆலோசனையின் பேரிலேயே ஆ.ராசா இந்தப் பேட்டியை அளித்தார் என்றும், ஆதவ் அர்ஜூனா தான் சொன்ன கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், இது நடைபெறாவிட்டால் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி தொடர்வது குறித்து திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் என்று திருமாவளவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று நமது மின்னம்பலம் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விசிகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இன்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் முதிர்ச்சியற்றது!

வி.சி.க. பொதுச்செயலாளரும், எம்.பியுமான ரவிக்குமார் இதுதொடர்பாக கூறுகையில்,  ”தி.மு.க.-வி.சி.க. கூட்டணி எண்ணிக்கை அடிப்படையில் ஆனது அல்ல, அது ஒரு கொள்கைக் கூட்டணி; வி.சி.க. இல்லை என்றால்வடமாவட்டங்களில் தி.மு.க.வால் தேர்தலில் வெல்ல முடியாது என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, அரசியல் முதிர்ச்சியற்றது” என தெரிவித்துள்ளார்.

காலத்தின் அழைப்பிற்காய் காத்திருப்போம்!

வி.சி.க. சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உயிர் கரு வளர்ந்து குஞ்சு கண்விழிக்கும் போது முட்டை உடைத்தெறியப்படுவது இயற்கைதான்; ஆனால், ஒருநாள் முன்னதாகவோ ஒருநாள் பின்னதாகவோ முட்டை உடைபட்டால் எல்லாம் பாழாகிவிடும்; காலத்தின் அழைப்பிற்காய் காத்திருப்போம்; தாய் கோழியின் சமிக்ஞை புரிந்து கொண்டு களமாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா கருத்தில் உடன்பாடு இல்லை!

அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “துணை முதல்வர் பதவி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் கருத்து விசிகவுக்கு ஏற்புடையதல்ல. அவரது கருத்திற்கு நாங்கள் உடன்படவில்லை. விசிக எப்போதும் தனிநபரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளாது. ஆதவ் அர்ஜுனாவின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. விசிக திமுகவுடன் கூட்டணியில் தான் தொடர்கிறோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று எங்கள் தலைவர் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்” என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

போலியான தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார் ஆதவ்!

அதே போன்று விசிக மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் அளித்துள்ள விளக்கத்தில், “திருமாவளவன் தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தான் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்தது. வேறு எந்த நிறுவனத்தாலும் எந்த தனிநபர் முயற்சியாலும் விசிக வெற்றி பெறவில்லை. ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விசிக வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்றதை போன்று போலியான தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார் ஆதவ் அர்ஜுன். தலைமை எடுக்கும் முயற்சிகளை அவர் தான் களத்தில் சாத்தியமாக்குகிறார் என்கிற வாதம் அபத்தமானது” என தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் சூழ்ச்சிகளை அனுமதிக்க மாட்டோம்!

விசிக செய்தித்தொடர்பாளர் விக்ரமன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், “அரசியல் கூட்டணி என்பது வியாபாரமோ, சூதாட்டமோ அல்ல. தமிழ்நாட்டு மக்கள் நலன் என்ற கொள்கை அடிப்படையில் அமைவது. இன எதிரிகள் தமிழ்நாட்டின் அமைதியை குலைத்து, வளர்ச்சியை சிதைத்து சின்னாபின்னமாக்கத் துடிக்கிறார்கள். அந்த சதித்திட்டம் இங்கு பலித்ததுமில்லை. இனி எடுபடப் போவதுமில்லை. தமிழ்நாட்டின் காவல் கோட்டமாய் நின்று கொண்டிருக்கும் திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பம் விளைவிக்க நடக்கும் சூழ்ச்சிகளுக்கு யார் துணை போனாலும் அதை அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆஸ்கருக்கு செல்லும் ‘லாபதா லேடீஸ்’!

தஞ்சாவூர், சேலம் இளைஞர்களுக்கு சொந்த ஊரிலேயே வேலை! – மினி டைடல் பார்க் திறப்பு!

+1
0
+1
3
+1
0
+1
3
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *