தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுவெளியில் மனம் விட்டுப் பேசியிருப்பது அவரது வலிமையை காட்டுகிறது என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம். தமிழ், இந்தி என பல மொழி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான குருதிப்புனல், அலைபாயுதே, நாயகன் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக பொதுக்குழுவில் பேசியது குறித்து ட்வீட் செய்துள்ளது அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நம்மவர்கள் யாரும் புதிய பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி என்பது போலத்தான் என் நிலைமை இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், மேலும் என்னை துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ மூத்தவர்களோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது” என்று பேசியிருந்தார்.
முதல்வர் இப்படி பேசியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்நிலையில், ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராம், ”பொதுவெளியில் மனம் விட்டுப் பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும்.
முக ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று அனைவரிடமும் உண்மையைப் பேசி இருக்கிறார்.
இது அவருடைய வலிமையையும், வெளிப்படைத் தன்மையையும், அச்சமற்ற நிலையையும் காட்டுகிறது. இதன் மூலம் அவர் நிமிர்ந்து நிற்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது ட்வீட்டை திமுகவினர் ஷேர் செய்து வருகின்றனர்.
முன்னதாக 2021 நவம்பர் மாதம் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது ட்வீட் செய்திருந்த பிசிஸ்ரீராம், ”நமது முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது.
அவரை பணியை செய்ய விடுங்கள். ஒன்றிணைந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்வோம். இந்த பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பிறகு அரசியல் சண்டைகளை வைத்துகொள்ளட்டும்.
அரசியல்வாதிகளின் உண்மையான நிறம் பற்றி நமக்கெல்லாம் தெரியும். அரசியல்வாதிகள் இதில் விளம்பரம் செய்ய மக்கள் நாம் அனுமதிக்கக் கூடாது” என்று முதல்வருக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
சாரு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்: சென்னை சர்ச்சையில் கவிதா பாரதி சாட்டை!
நளினி வழக்கு: நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக தமிழக அரசு பதில்!