ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் முடியாமல் தொடர்கிறது. இந்தப் போர் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் புதிய தாக்குதலை நடத்தி, உக்ரைனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது வரை நீடித்து வரும் இந்தப் போரில், இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போருக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
உக்ரைனில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான மக்கள், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
இந்தச் சூழலில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற ரஷ்யா-மத்திய ஆசிய நாடுகள் இடையிலான மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடியாக மோதினால், அது உலகளாவிய பேரழிவுக்கு வழி வகுக்கும்.
அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என கூறி வரும் நட்பு நாடுகளான இந்தியா, சீனாவின் நிலைப்பாட்டை ரஷ்யா மதிக்கிறது” என்று கூறியவர்,
உக்ரைனை அழிப்பது ரஷியாவின் நோக்கம் அல்ல என்றும் உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் புதிய தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என்றும் தெரிவித்த அவர், உக்ரைன் படையெடுப்பில் ரஷ்யா எல்லாவற்றையும் சரியாகவே செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
-ராஜ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – வயதாக ஆக உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமா?