நாடாளுமன்றத்தில் சிஎஸ்ஐஎஃப் வீரர்கள் நடத்திய விதம் வேதனை அளிப்பதாக எம்.பி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை எம்.பி அப்துல்லா, நேற்று (ஜூன் 18) நாடாளுமன்றத்துக்கு சென்ற நிலையில், அவரை சிஎஸ்ஐஎஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
இதுதொடர்பாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்காருக்கு எம்.பி அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஒரு மோசமான நிகழ்வை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர அதிர்ச்சியுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
ஜூன் 18ஆம் தேதியின் நாடாளுமன்ற ஹவுஸ் எஸ்டேட் பகுதியில் மதியம் 2.40 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது.
ஹவுஸ் எஸ்டேட் பகுதிக்குள் நான் பேட்டரி வாகனத்தில் நுழைந்தபோது, TKR-II பகுதியில் என்னை சிஎஸ்ஐஎஃப் பாதுகாப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
எதற்காக நாடாளுமன்றத்துக்குள் செல்கிறீர்கள், நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்னை சிஎஸ்ஐஎஃப் வீரர் நடத்திய விதம் வேதனை அளிக்கிறது. அவர்களது நடவடிக்கை திகைக்க வைக்கிறது.
இதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்ததில்லை. இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ பணிகள் எதுவும் இல்லாவிட்டாலும் அவர்களால் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும்.
எனவே தவறு செய்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக எம்.பி.யை சிஎஸ்ஐஎஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக எம்.பி. அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றம் செல்வதற்கு அனைத்து உரிமைகளும் உறுப்பினர்களுக்கு இருக்கிறது.
இந்தியா கூட்டணி எம்.பி.க்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்ற பாதுகாப்பு சிஐஎஸ்எஃப்-க்கு மாற்றப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு பணி கடந்த மே 20ஆம் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அதிமுகவை காப்பாற்றியது யார்? சசிகலாவுக்கு எடப்பாடி பதிலடி!
மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!