திமுக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை பொறுக்க முடியாமல்தான் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கட்சி தொண்டர்களுக்கு இன்று (நவம்பர் 12) கடிதம் எழுதியுள்ளார்.
சதிகளை முறியடிக்க சளைக்காத உழைப்பு தேவை!
அதில், “மாதம் மும்மாரி பொழிந்ததா?” என்று அரண்மனை உப்பரிகையில் நின்று வேடிக்கை பார்த்தபடி மந்திரிமார்களிடம் நிலவரம் கேட்கும் ஆட்சியல்ல இது. அன்றாடம் மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து, அவை முறையாகச் செயல்படுகிறதா என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, பணிகளை நிறைவேற்றிடும் ஜனநாயக மாண்புமிக்கது நம் திராவிட மாடல் ஆட்சி.
இந்த ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில், ஆட்சியின் தன்மையை மக்களின் முகமலர்ச்சியே பதிலாகச் சொல்லிவிடுகிறது. அந்த முகமலர்ச்சியானது அவர்களின் உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சியின் மொழிபெயர்ப்பு.
கோவையில் நவம்பர் 5, 6 தேதிகளில் நடைபெற்ற அரசுப் பணிகள் கள ஆய்வு, கழகப் பணிகள் கலந்தாய்வு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மக்களின் வரவேற்பு, உடன்பிறப்புகளுடனான சந்திப்பு எனச் சென்ற இடமெல்லாம் மகிழ்ச்சியும் எழுச்சியும் நிறைந்திருந்ததுபோலவே, நவம்பர் 9, 10 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொண்ட பயணமும் முழுமையான வெற்றியாக அமைந்ததை உடன்பிறப்புகளாம் உங்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு சாதராண உழைப்பு போதாது, சதிகளை முறியடிக்கக்கூடிய சளைக்காத உழைப்பு தேவை என்பதை விருதுநகர் உடன்பிறப்புகளிடம் எடுத்துரைத்தேன்.
விருதுநகர் மாவட்டத்தில் கழகம் தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதிகளான விருதுநகர், திருச்சுழி மற்றும் ராஜபாளையம் தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகளையும் பாராட்டி, அந்த இரு தொகுதிகளின் வெற்றியைத் தக்க வைத்துக்கெள்வதுடன், மாவட்டத்தின் மற்ற தொகுதிகளிலும் 2026-இல் நிச்சய வெற்றி என்பதை உறுதி செய்யும் வகையில் உழைக்க வேண்டியதை உங்களில் ஒருவனாக வலியுறுத்தினேன்.
விருதுநகரில் 10ஆம் தேதி மாபெரும் மக்கள் நலத்திட்ட விழாவுக்குச் சென்றேன். ஏறத்தாழ 40 ஆயிரம் பேருக்குப் பட்டா வழங்கும் விழா என்பதால், பயனாளிகள் அனைவருக்கும் பட்டா கிடைத்ததை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட அமைச்சர்களிடம் தெரிவித்தேன். நலத்திட்ட விழா நிறைவடைந்தபோது, அத்தனை பேருக்கும் பட்டா உள்ளிட்ட பயன் தரும் உதவிகள் முறையாகப் போய்ச் சேர்ந்திருப்பதை உறுதி செய்தனர்.
எடப்பாடி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார்!
நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர்கூட விடுபடுதல் கூடாது என்ற அக்கறை முதலமைச்சரான எனக்கு மட்டுமல்ல, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை இருப்பதால் மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது.
இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என அநாவசியமாகப் பொங்குகிறார்.
95 ஆண்டுகால வாழ்வில் 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வை தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அர்ப்பணித்த மகத்தான தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பியான அவரது புகழ் போற்றும் வகையில் அவரது நூற்றாண்டின் நினைவாக சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் மாபெரும் நூலகம், ஏறுதழுவுதல் அரங்கம் போன்றவற்றை அமைத்தோம். தலைவர் கலைஞரைப் போலவே மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் போற்றவும் இந்த அரசு தவறியதில்லை.
தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், அரசியல் சட்டம் வகுத்து தந்த டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும், அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளைத் தனிப்பெருங்கருணை நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு. அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என அரும்பெரும் தலைவர்கள் பெயரில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான்.
விருதுநகரில் நான் சென்று பார்வையிட்ட அரசு காப்பகத்திற்கு அன்னை சத்யா காப்பகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தலைவர் கலைஞரின் 40 ஆண்டுகால நண்பரான எம்.ஜி.ஆர். அவர்களின் தாயார்தான் அன்னை சத்யா. அவர் பெயரில்தான் அரசு காப்பகம் இன்னமும் இயங்கி வருகிறது.
இந்த அடிப்படை கூட எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படிப் புரியாமல் போனதோ, பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணி வேதனைப்படுகிறேன். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது.
அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம்!
பிரிட்டனிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஆங்கில ஏடான Financial Times எழுதியுள்ள கட்டுரையில், “கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் உற்பத்தி பெருகிக்கொண்டே வருகிறது.
உலகளாவிய நிறுவனங்களான ஜாகுவார் லேண்ட் ரோவர், நைக், சிஸ்கோ, ஃபாக்ஸ்கான், ஃபோர்டு, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நம்பிக்கையுடன் முதலீடு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் கல்வித்தரம் மிகவும் உயர்ந்துள்ளது. திறமைமிக்க தொழிலாளர்கள் உள்ளார்கள். இந்தியப் பெண் தொழிலாளர்களில் 40% பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.
முதலீட்டிற்கும் வணிகத்திற்கும் ஏற்ற மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளைச் செய்கின்றன. முதலீட்டாளர்களுக்கு அரசியல்ரீதியாக எந்தச் சிக்கலும் நெருக்கடியும் வராதபடி தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கை அமைந்துள்ளது.
இந்தியா தன்னுடைய உற்பத்தியை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியில் உலக அரங்கில் உயர வேண்டுமென்றால் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும் பிரதிபலிக்க வேண்டும்” என்று திராவிட மாடல் அரசின் தொழிற்கொள்கையையும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும் பற்றி வெளியிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆய்வுப் பயணத்திலும் அந்த மாவட்டத்தின் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே நல்ல வேலையைப் பெறுகிற வகையில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி வருகிறோம். கோவை, விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளவிருக்கிறேன்.
தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை அங்கே தொடங்க இருப்பதால் இரு மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். கழக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்” என்று ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
படுமோசமாக உள்ள டெல்லியின் காற்று… பொதுமக்கள் அவதி!
விராட் கோலி குறித்து இந்தியில் செய்தி வெளியிட்ட ஆஸி. பத்திரிகை… காரணம் என்ன?