முரண்களை முடக்குவது பாசிசம், முரணரசியலே மக்களாட்சி!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை 

பாசிசம் என்றால் என்ன என்ற விவாதம் தமிழ்த் தொலைக்காட்சிகளில் சென்ற வாரம் மீண்டும் முக்கிய இடம் வகித்தது. பொதுவாகவே பாசிசம் என்றால் என்ன என்று இணையத்தில் தேடிப்பார்த்தால்கூட குழப்பமான பல வரையறைகள்தான் கிடைக்கின்றன.

ஒரு மனிதரிடம் அதிகாரம் குவிதல், அடக்குமுறை ஆட்சி, ஒடுக்குமுறை எனப் பலவிதமான அடையாளங்கள் பாசிசத்துக்குக் கொடுக்கப்படுகின்றன. அரசியல் தத்துவத்திலும், கல்விப்புலத்திலும்கூட பலவிதமான விளக்கங்கள் தரப்படுகின்றன.

இவையெல்லாம் சேர்ந்து பாசிசம் என்ற வார்த்தைக்குத் தனித்துவமான அர்த்தம் இல்லையோ என்றுகூட எண்ணச் செய்கிறது. உதாரணமாக, இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையும் பாசிசம் என்று கூறுகிறார்கள். காவல்துறை பொது ஒழுங்கைப் பேணுவதற்கு மறியல் செய்யும் மக்களை கைது செய்தால் அதுவும் பாசிசம்தான் என்று ஒருவர் கூறிவிட முடிகிறது.

அப்படியானால் பொது ஒழுங்கு என்பதை அரசு பேணுவதே பாசிசம்தானா? அரசு என்பதே பாசிசம்தானா? அரசற்ற நிலை என்பதை அராஜகம் என்பார்கள். ஆங்கிலத்தில் அனர்க்கி என்பார்கள். அந்த நிலைதான் நல்லதா என்பது போன்ற கேள்விகள் எழும்.

இத்தகைய விவாதங்கள் ஒருவிதத்தில் அரசியல் குறித்து சிந்திக்க வைத்தாலும், குறைந்தபட்ச தெளிவு இல்லாவிட்டால் யாரும் எதையும் அவரவர் விருப்பத்துக்கேற்ப நியாயப்படுத்துவதில்தான் முடியும். பாசிசம் என்ற சொல் இத்தாலியில் ஓர் அரசியல் கோட்பாடாகத்தான் அறிமுகம் ஆனது. ஆனால், இத்தாலியின் முசோலினியை விட, ஜெர்மனியின் ஹிட்லரே அந்தத் தத்துவத்தை தனது நாசிசத்தின் மூலம் முழுமையாக்கினார் என்று கூறலாம்.

உலகின் பிற சர்வாதிகாரிகள், எதேச்சதிகாரிகள் ஆகியோரிடமிருந்து இவர்களை வேறுபடுத்துவது எது என்ற கேள்வியை நாம் முதலில் கேட்டுக்கொள்ள வேண்டும். அது அவர்கள், மக்களை ஒன்றுதிரட்டி அவர்கள் ஆதரவைப் பெற்ற முறைதான் என்பதை நாம் கவனத்தில்கொண்டால் பாசிசம் என்பது அரசரிடமோ, ஒரு நபரிடமோ குவியும் அதிகாரம் மட்டுமல்ல என்பதைக் காணலாம்.

பாசிசம் தோன்றியது எப்போது? 

பாசிசம் ஒரு பிரம்மாண்டமான ஒத்திசைவை கற்பனை செய்வது. சமூகத்திலுள்ள முரண்களெல்லாம் முடக்கப்பட்டு, சமூக இயந்திரம் எந்தக் கேள்வியும் இல்லாமல், நம்பிக்கையையும், விசுவாசத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பொது ஒழுங்கை நிறுவிக்கொள்ளும் திட்டம்தான் பாசிசம். இதை ஓர் அரச இறையியல் என்று கூறலாம். ஆங்கிலத்தில் Political Theology என்று கூறுவார்கள். அதாவது அரசியலும், இறையியலும் கலந்து அரசே சமூகத்தின் சகல அங்கங்களிலும் ஊடுருவி நிற்கும் நிலை எனலாம்.

இது பழைய பேரரசர்கள் / மதகுருமார்கள் / படைத்தலைவர்கள் கூட்டணியிலும் நடக்கவில்லையா என்று கேட்கலாம். நிச்சயம் இல்லை. பேரரசர்கள் பெரும்பாலான நேரம் கிளர்ச்சிகளை அடக்குவதிலேயே செலவிட வேண்டியிருந்தது. வெளி எதிரிகள் போதாதென்று, அரண்மனைக்குள்ளேயே சதி வேலைகள் நடக்கும். சமூக ஒழுங்கைப் பேணுவதில் மதங்களுக்கும், மதகுருமார்களும் முக்கிய பங்கு இருந்தாலும், அதிலும் எப்போதும் புதிய பிரிவுகள் தோன்றுவதும், புதிய குருமார்கள் உருவாவதுமாக முரண்பாடுகள் உருவானபடிதான் இருக்கும்.

மானுடத்தின் அறியப்பட்ட வரலாற்றில் அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் என எல்லாவற்றிலும் சர்வாதிகாரிகளும் (Dictators), எதேச்சதிகாரிகளும் (Despots) தோன்றியபடியேதான் இருந்தார்கள். ஆனால், பாசிசம் என்பது இருபதாம் நூற்றாண்டில் உருவான நவீன கருத்தியல் என்பதையும் கவனிக்க வேண்டும். அதற்குக் காரணம் ஊடகங்களின் மூலமாக ஒரு பெரும் மக்கள் திரளை ஒரு கருத்தியலுக்கு ஆட்படுத்தி மூளைச்சலவை செய்யும் சாத்தியம் அப்போதுதான் தோன்றியது.

ஆனால், பாசிசம் தோன்றுவதற்கு முன்பு அதே ஊடகங்கள் இரு பெரும் முரணரசியல் தத்துவங்களைச் சாத்தியமாக்கியிருந்தன. அவற்றுக்கு எதிராகத்தான் பாசிசம் உருவானது என்று கூறலாம். முதல் தத்துவம், தனி நபர் உரிமைகளை, சுதந்திரத்தை உறுதி செய்யும் சுதந்திரவாத தத்துவம். இரண்டாவது, தொழிலாளர்களுக்கும், முதலீட்டிய சக்திகளுக்கும் இடையிலான வர்க்க முரண்களின் மோதலின் விளைவாக உருவான பொதுவுடமைத் தத்துவம்.

சுதந்திரவாதத்தின் முரண் என்பது தனி நபர்களின் சுதந்திரத்தின் எல்லைகளுக்கும், சமூக பொது நன்மைக்குமான முரண் எனலாம். இதன் தொடர்ச்சியாகவே சமூகத்தின் பல்வேறு குழுக்களின் நலன்களுக்கும், பொது நன்மைக்குமான முரணும் முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக உற்பத்தியாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் உள்ள முரண்கள், வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான முரண்கள் ஆகியவற்றைக் கூறலாம். இது இன்னும் விரிவடைந்த நிலையில் மக்களாட்சி என்னும் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக்கும், சட்டத்தின் ஆட்சி என்னும் குடியரசின் நீண்ட கால தொடர்ச்சிக்கும் இடையிலான முரணாகவும், அதாவது அரசுக்கும், நீதிமன்றத்துக்குமான முரணாகவும் மாறுகிறது.

பொதுவுடமை சித்தாந்தத்தில் தனியுடமை காரணமாக முதலீட்டைக் கட்டுப்படுத்தும் முதலாளிகளுக்கும், உற்பத்தியைச் சாத்தியப்படுத்தும் தொழிலாளர்களுக்குமான முரண் முக்கியத்துவம் பெற்றது. தொழிற்புரட்சிக்குப் பின் பெருகிய உற்பத்தியில் பெரும் முதலீட்டியக் குவிப்பு சாத்தியமானதால், உழைப்புச் சுரண்டல் பல்வேறு வடிவங்கள் எடுத்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வும் புதிய வடிவங்கள் எடுத்தது. அத்தகைய நிலையிலேயே தனிநபர் வருவாய், சொத்துகள் ஆகியவற்றை எந்த அளவு அனுமதிப்பது, எவ்வளவு வரி விதிப்பது ஆகியவை முக்கிய அரசியல் கொள்கைகளாக மாறின. முழுவதும் பொதுவுடமைச் சமூகமாக மாறாவிட்டாலும், சமூகப் பகிர்வை வலியுறுத்தும் சோஷலிச சித்தாந்தம் முக்கியமான அரசியல் தத்துவமானது.

வர்க்க முரண்களை, பொருளாதார ஏற்றத்தாழ்வை வலியுறுத்தும் பொதுவுடமை மற்றும் சோஷலிச சித்தாந்தங்களுக்கு எதிரான எதிர்ப்புரட்சியாகத்தான் பாசிசம் உருவானது. அது பண்டைய பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படையில் பெரும்பான்மை மக்களை ஒற்றை தேசிய அடையாளமாக்கி சில சிறுபான்மை அடையாளங்களை எதிரிகளாக்கி முரணரசியலை முடக்கி வெறுப்பரசியலை வளர்ப்பதில் வெற்றி பெற்றது.

இத்தாலியில் தொழிலாளர் இயக்கங்கள், விவசாயிகளின் போராட்டங்கள் ஆகியவற்றை ஒடுக்கி, ஒரு ராணுவ வாத தேசியத்தை வலியுறுத்துவதாகவே முசோலினியின் தலைமையில் பாசிஸ்டுகள் உருவானார்கள். ஜெர்மனியிலும் பொருளாதாரச் சீர்குலைவின் காரணமாக வலுவிழந்த தொழிலாளர் இயக்கங்கள், சோஷலிச கட்சி ஆகியவற்றினை எதிர்த்து இயங்கியே ஹிட்லரின் நாஜிக் கட்சி வளர்ந்தது. முசோலினி பண்டைய ரோம சாம்ராஜ்ய பெருமையை முன்னெடுத்தார் என்றால், ஹிட்லரோ ஆரிய இன அடையாளத்தை மையமாக்கி யூதர்களின் மீதான கடும் வெறுப்பரசியலை முன்னெடுத்தார்.

இத்தாலியும், ஜெர்மனியும் முதல் உலகப் போரில் தோல்வியுற்றதால் உருவான தேசிய அடையாளத்தின் தாழ்வுணர்ச்சியும் இந்த பாசிச, நாஜி இயக்கங்கள் வெற்றி பெறக் காரணமாயின. இங்கேதான் தேசியம் எப்படி பாசிசமாக திரிபடைய முடியும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசியத்தின் இரண்டு வடிவங்கள்

தேசம் என்பது மக்களின் சுயாட்சியை, மக்களாட்சியைச் சாத்தியப்படுத்த இன்றியமையாத ஓர் அரசியலமைப்பு. உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் தொகுதிகளும் இப்படி சுயாட்சிப் பிரதேசங்களாக மக்களாட்சி முறையை நிறுவினால், உலக அளவில் ஒரு கூட்டாட்சி வடிவத்தையும் உருவாக்க முடியும். ஏனெனில் உலக மக்கள் எல்லாம் மானுட பொது நன்மை என்ற லட்சியத்தின் அடிப்படையில் யாரும், மற்றொருவருக்கு விரோதியல்ல என்ற நிலையை எட்ட முடியும்.

பண்டைய காலத்தில் ஒவ்வோர் அரசரும் பேரரசராகி தன்னுடைய ஆட்சிப் பிரதேசத்தை அதிகரித்துக் கொண்டே போவதற்காக ஓயாமல் போரிடும் பழக்கத்திலிருந்து மக்களாட்சி வடிவம் காப்பாற்றும் என்பதே பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உருவான சிந்தனைகளின் அடிநாதமாக இருந்தது. சட்டத்தின் ஆட்சியான குடியரசு தத்துவமும், மக்களின் பிரதிநிதிகளால் உருவாகும் அரசாங்கமும், உலக மக்களிடையே ஒருங்கிணைப்பைச் சாத்தியமாக்கி அனைவரும் உலகக் குடிநபர்களாக மாற முடியும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது.

இவ்வகையான அதிகாரப் பகிர்வையே மைய நோக்கமாகக் கொண்ட தேசியத்தை சுயாட்சி தேசியம் என அழைக்கலாம். இத்தகைய தேசியத்தில் மக்கள் குழுக்களுக்கிடையான முரண்கள் கருத்தியல் முரண்களாக மாறி, பொதுமன்றத்தில் விவாதங்கள், உரையாடல்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பண்பாட்டு முதிர்ச்சியாகக் கருதப்பட்டது.

பொதுவான சட்டத் திட்டங்களுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றாலும், அவற்றுக்கு எதிராக வாதிட அனைவருக்கும் பூரண உரிமை இருக்க வேண்டும் என்பதே நவீன பொதுமன்றத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரம் ஆகும். “எவ்வளவு வேண்டுமானாலும் விவாதியுங்கள், ஆனால் விவாதித்தினூடாக இயற்றப்பட்ட சட்டங்களுக்கு கீழ்படியுங்கள்” என்று கூறுவதே முதிர்ச்சியுற்ற அரசு என்று கூறினார் ஜெர்மானிய தத்துவ மேதை இமானுவேல் காண்ட்.

என்ன பிரச்சினை என்றால் இவ்வாறு உருவாகும் தேசங்கள், தங்கள் பொது அடையாளத்தை உறுதிப்படுத்த உருவாக்கும் தேசியச் சொல்லாடல் பிற அடையாளங்களை எதிரிகளாகக் கட்டமைக்கும்போது, இறையாண்மை என்பது மீண்டும் போர் எந்திரமாக மாறுகிறது. இத்தகைய போர் எந்திர இறையாண்மை தேசத்தின் மக்களிடையே முரண்கள் நிலவுவது பலவீனம் என்று கருதுகிறது. அதனால் கருத்தியல் மோதல்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டும், சமத்துவத்துக்கான போராட்டமும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தீவிர தேசிய நிலைபாடு எடுக்கிறது.

இந்த நிலையில்தான் பாசிசம் ஓர் எதிர்ப்புரட்சி சொல்லாடலாக, மீட்புவாத சொல்லாடலாக அதிகாரத்தை ஒற்றைப்புள்ளியில் குவித்து, முரண்களற்ற சமூக ஒத்திசைவை உருவாக்க விரும்புகிறது. அதைச் சாதிக்க பெரும்பான்மை அடையாளத்தை சிறுபான்மையினருக்கு எதிராகக் கட்டமைக்கிறது. குறிப்பாக, சமத்துவத்தை நாடும், மக்களின் சுதந்திர உரிமைகளை நாடும் புரட்சிகர சக்திகளை ஒடுக்க இவ்விதமான அடையாளவாத அரசியல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

நாளை நடக்கப்போகும் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இந்த அம்சங்களைக் காணலாம். பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக விளங்கும் டொனால்ட் டிரம்ப், அனுமதியின்றி அமெரிக்காவில் குடியேறிய மெக்சிகோ, தென்னமெரிக்க மக்களுக்கு எதிரான கடுமையான வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார். இந்த “வந்தேறிகள்” குறித்த சொல்லாடலால் கவரப்படும் வெள்ளையின மத்தியதர மக்கள் தங்களை சுரண்டும் கார்ப்பரேட் சக்திகளை மறந்து அவர்கள் பாதுகாவலனான டிரம்புக்கு வாக்களிக்கத் தலைப்படுகின்றனர். இந்த இனவாத வெறுப்பரசியலை எதிர்த்து இந்திய-ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸால் வெற்றிபெற இயலுமா என்பது மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய கேள்வியாக உள்ளது. டிரம்ப் ஆதரவாளர்களின் முழக்கம் அருவமான தீவிர தேசியச் சொல்லாடலான “அமெரிக்காவை மீண்டும் மகத்துவம் பெறச் செய்வோம்” (MAKE AMERICA GREAT AGAIN) என்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில் இந்து மக்கள் கட்சி  

தமிழ்நாட்டில் அச்சுத் தொழில் பெருகி, பொதுமன்றம் உருவாகி, நவீன அரசியல் சிந்தனைகள் உள் நுழையும்போதே அது பிராமணர்களின் கருத்தியல் மேலாதிக்கத்தையும், அவர்களை பிறப்பிலேயே பிறரைவிட உயர்ந்தவர்களாகக் கூறும் வர்ண தர்ம கருத்தியலையும் எதிர்த்து, பார்ப்பனரல்லாதோரின் அரசியலாகத்தான் மலர்ந்தது. ராமலிங்க அடிகளின் சமரச சன்மார்க்கம், நவீன சைவர்களின் வைதீக மறுப்பு, அயோத்தி தாசரின் நவ பெளத்தம் என பல்வேறு சிந்தனை போக்குகள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சமஸ்கிருத ஆரிய பண்பாட்டுக்கு எதிராக திராவிட பண்பாட்டை முன்னிறுத்தின.

இது ஜாதீய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான, அது சாத்தியப்படுத்திய உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான முரணரசியல் களமாக தமிழ்நாட்டு அரசியலை உருவாக்கியது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பெரும் சிந்தனைப் புரட்சியாக மக்களிடையே மரபு குறித்த கேள்விகளை எழுப்பி, புதிய சமநீதி, சமத்துவ சமூகத்துக்கான அடிப்படைகளை உருவாக்கியது. பார்ப்பனீய கருத்தியலுக்கு எதிரான சொல்லாடல் ஒருபோதும் பார்ப்பன வெறுப்பு சொல்லாடலாக சரிந்துவிடாமல் பெரியாரும், அவர் வழிவந்த தலைவர்களும் பார்த்துக்கொண்டார்கள். முற்போக்கு எண்ணம் கொண்ட பிராமணர்களை அவர்கள் பாராட்டி அரவணைக்க தயங்கியதில்லை என்பதை சமீபத்தில் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு பெரியார் – மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பாக முனைவர் பட்டம் வழங்கி ஆசிரியர் வீரமணி அவர்கள் சிறப்பித்ததைக் கூறலாம்.

இந்திய குடியரசு உருவானபோது கூடவே உருவான திமுக, தமிழ்நாட்டின் மக்களாட்சிக்கான முரணரசியல் களத்தை பழைய ஜாதீய நிலவுடமை சமூகத்துக்கும், புதிய சமூகநீதி சமத்துவ சமூகத்துக்கான முரணரசியலாகக் கட்டமைப்பதில் வெற்றி பெற்றது. அதன் வழியிலேயே இன்று பல்வேறு மக்கள் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பல கட்சி மக்களாட்சியாக தமிழ்நாடு அரசியல் முதிர்ச்சியடைந்து வருகிறது.

இதற்கு முரணாக பதினெட்டாம் நூற்றாண்டு மராத்திய பேஷ்வா ஆட்சியின் எச்சங்களிலிருந்து உருவான ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா, அவற்றின் அரசியல் கட்சி வடிவமான பாரதீய ஜனதா கட்சி ஆகியவை முஸ்லிம்களுக்கு எதிரான பொது அடையாளமாக இந்து அடையாளத்தை கட்டமைப்பதன் மூலம், ஜாதீய ஏற்றத்தாழ்வின் முரண்களை முடக்கிவிட முயற்சி செய்கின்றன. மத அடையாளவாத தேசியத்தின் மூலம் மாநில உரிமைகள், சமூக நீதி கோரிக்கைகள் ஆகியவற்றின் முரணரசியல் அம்சங்களை முடக்கி, பெருமுதலீட்டியத்துக்கு ஆதரவான சமூக ஒழுங்கை கட்டமைக்க முயல்கின்றன.

இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ்நாட்டில் சங்க பரிவாரத்தின் துணை அமைப்பான அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி, பிராமணர்களை “பாதுகாக்க” ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. பிராமணர்களை இழிவுபடுத்துவதைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தங்களை பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு இன்றளவும் பிறரை தீண்டாமை நடைமுறைகளுக்கு உட்படுத்தும் சமூகத்தையும், அவர்களால் சுரண்டப்பட்டு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் “இந்து” என்ற பொது அடையாளத்தில் ஒன்றிணைக்க முடிவதுதான் பாசிசத்தின் முரணரசியல் முடக்கத்திற்கான சமகால உதாரணம்.

ஜாதீய ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து பேசி, சமூகநீதி அரசியலை முன்னெடுக்கும் திராவிட கட்சிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு முதன்மை கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றை பாஜகவும், ஆதரவு அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பதைக் காணலாம்.  இதற்குக் காரணம் அவர்களுக்கு முரணரசியல் என்பது ஏற்புடையதல்ல என்பதுதான். மக்களாட்சியின் உயிர்நாடியான முரணரசியலை முடக்குவது என்பதுதான் பாசிசம்.

மக்களாட்சி நடைமுறைகளில் பற்றுள்ள அனைவரும், பாசிச முனைப்புகளை சரியாக அடையாளம் கண்டு அவற்றை முறியடிப்பது என்பது காலத்தின் கட்டாயம். அதற்கு பாசிசத்துக்கும், முரணரசியலுக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு புரிந்துகொள்வதின் அவசியத்தை வெளிப்படுத்துவதாகத்தான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேரளாவில் மலையாள மனோரமா ஏடு நடத்திய விழாவில் நிகழ்த்திய உரை அமைந்துள்ளது. சமூகநீதி, மாநில சுயாட்சி, மொழியுரிமை உள்ளிட்ட முரணரசியல் பரிமாணங்களின் வரலாற்றை எடுத்துக்கூறி அவற்றின் தொடர்ச்சியை வலியுறுத்தியுள்ளார் அவர்.

கட்டுரையாளர் குறிப்பு:      

Stifling contradictions is fascism - contradiction politics is Democracy - article in Tamil by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்சிக்குத் தலைவர் அமைந்தால் பாயசம், தலைவரே கட்சி என்றால் பாசிசம்!

ஆரியம் ஏன் இன்று “தமிழ் வேண்டும், திராவிடம் வேண்டாம்” என்று சொல்கிறது?

‘திராவிட நல் திருநாடு’: கவனச் சிதறலும் கவனமிகு தொடர்ச்சியும்!

இஸ்ரேலின் அத்துமீறல்: இந்திய அரசு கண்டிக்கத் தயங்குவது ஏன்?

டிஜிட்டல்  திண்ணை:  எடப்பாடி – விஜய்… 2026 மாஸ்டர் பிளான் இதுதான்!

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *