தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் உண்மைகளையும், கடுமையான பரிந்துரைகளையும் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மீது,
தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்ட போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் நடத்தி வந்தது.
விசாரணை ஆணையத்தின் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்தார்.
விசாரணை ஆணையத்தின் அறிக்கை தொடர்பான தகவல் ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், போராட்டக்காரர்களின் கூட்டத்தினை கலைப்பதற்காகத் தான், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
குருவிகளை சுடுவது போல் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரம் நடந்தபோது பொறுப்பில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கும், அப்போதைய அதிமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதன்காரணமாக தான் இப்படுகொலை நடந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
அதுகுறித்து விசாரணை ஆணையம் ஏதேனும் தகவல் வெளியிட்டார்களா என்பதை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விசாரணை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
செல்வம்
குருவிகளை போல் சுட்டுக் கொலை! தூத்துக்குடி சம்பவம்-விசாரணை அறிக்கை!