ஈரோடு: இரவோடு இரவாக தலைவர்கள் சிலைகள் மூடல்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இரவோடு இரவாக மாநகராட்சி பணியாளர்கள் தலைவர்களின் சிலைகளை மூடி மறைத்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி காலமானார்.
இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவு கல்வெட்டு துணியால் மூடப்பட்டது. அதுபோன்று அலுவலக அறைகளில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன.
பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்த பெரியார், அம்பேத்கர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் பச்சை துணியால் மூடப்பட்டன. ஜெயலலிதா, கலைஞர் ஆகியோரது பெயரால் வைக்கப்பட்டிருந்த பலகைகளும் மறைக்கப்பட்டன. பொதுத் தேர்வு வெற்றி நூலகத்தின் மீதிருந்த சிலைகளும் இரவோடு இரவாகத் துணியால் மூடப்பட்டன.
விதிமுறைகள் மீறப்படுவதைக் கண்காணிக்க அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 52 இடங்களில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஆண் வாக்காளர்கள் 1.10 லட்சத்துக்கு அதிகமானோரும், பெண் வாக்காளர்கள் 1.16லட்சத்துக்கு அதிகமானோரும், மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் என மொத்தம் 2,26,898 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இந்த தொகுதியில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்ததாக தமாக 58,396 வாக்குகள் பெற்றிருந்தது.
இந்நிலையில் திருமகன் ஈ.வெ.ரா மறைவைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் நேற்று முதல் தீவிரமாக நடந்து வருகின்றன.
பிரியா
சட்டம் ஒழுங்கு நிலவரம்: முதல்வர் ஆலோசனை!
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்