தமிழ்நாட்டில் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு சிலை வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் – ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இன்று சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆறு நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் சங்கங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் ‘வேர்களை தேடி’ என்ற அயலக தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “கடல் கடந்து வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பது போலதான் உணர்கிறேன். சிங்கப்பூரில் தமிழ் நீக்கமற நிறைந்திருக்க அடிப்படை காரணமாக இருந்த முதல் பிரதமர் லீ குவான் யூ -வுக்கு தமிழர்கள் சார்பாக நான் இந்த விழா மூலமாக நன்றி செலுத்துகிறேன்.
ஒரு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை மிகக் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி, தொழில், முன்னேற்றம், கட்டுமானம், கப்பல் துறை, விமான போக்குவரத்து என உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர்.
சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் இந்த நாட்டின் அதிபராக அதாவது குடியரசுத் தலைவராக 12 ஆண்டுகள் சேவையாற்றி இருக்கிறார். அவர் காலஞ்சென்ற எஸ்.ஆர். நாதன்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “லீ குவான் யூ அவர்களுக்கு தமிழ்நாட்டில் நினைவு சின்னம் எழுப்ப நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அங்கு பரவாக்கோட்டை, கூப்பப்பாச்சி கோட்டை, திரும்ப கோட்டை, உள்ளிக்கோட்டை, ஆலங்கோட்டை, நெடுவாக்கோட்டை மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு என்பதை நான் அறிவேன்.
இந்த கிராமங்களில் இருந்து இங்கு வந்தவர்கள் தான் அதிகம். எனவே லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும்” என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
பிரியா