இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் தளபதி சரணடைவது போல சிலை… உடைத்த கலவரக்காரர்கள்… சசி தரூர் கடும் கண்டனம்!

Published On:

| By Kumaresan M

வங்கதேசப் போரின் போது, இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவ தளபதி சரண் அடைவது போன்று அமைக்கப்பட்டிருந்த சிலை உடைத்து எறியப்பட்டுள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16 ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அதுவரை கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பகுதி, இந்தப் போருக்குப் பிறகுதான் வங்கதேசம் என்ற தனி நாடாக உருவானது. இந்த போர் 13 நாட்கள் நடந்தது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதியன்று இந்தப் போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியது. அடுத்த நாளான டிசம்பர் 16-ம் தேதியில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்தார். போர் முடிவுற்ற பிறகு, வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது.

இந்த வெற்றியை நினைவு கொள்ளும் வகையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவிடம் சரணடைவது போல சிலை ஒன்று டாக்காவிலுள்ள ஷாகித் மெமோரியல் காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த சிலையை கலவரக்காரர்கள் உடைத்து எறிந்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் , ”வங்கதேசத்தில் இந்திய கலாசார மையங்கள் , இந்துக்கள், பிற மதத்தவரின் வழிபாட்டு தளங்களை குறி வைத்து தாக்குவது வன்முறையாளர்களின் எண்ணமாக இருப்பது தெரிய வருகிறது. சில இஸ்லாமிய மக்களே தங்களுக்கு வேண்டப்பட்ட மக்களை காத்து நிற்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. வங்கதேசத்தில் புதிய அரசு, இந்த வன்முறையாளர்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இந்தியா என்றென்றும் வங்க தேசத்துக்கு ஆதரவாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

– எம்.குமரேசன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு மாமனார் கொடுத்த பரிசு என்ன… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க?

ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel