தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றால், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று (செப்டம்பர் 3) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறோம். எந்த மாநிலத்திலும் இன்றி தமிழ்நாட்டில் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதமாகியும் குறைக்க, நடவடிக்கை இன்றி அதிகரிக்கவே நடவடிக்கை எடுக்கின்றனர்.
திண்டுக்கல் அருகே பிறந்த நாளையொட்டி 7 மாணவிகள் மது விருந்து அளித்துள்ளனர். இது போன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் ஊடுருவுகிறது.
மதுவிலக்கு வலியுறுத்தி 100 பொதுக்கூட்டம் அறிவித்துள்ளோம். தொடர்ந்து நடத்துகிறோம். நேற்று திருச்சுழியில் நடந்தது.
அக்டோபர் 2ஆம் தேதிக்குள் மதுவிலக்கு அமல் இல்லையெனில் தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம். அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்துகிறோம்.
நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதை மாற்றி, நான்கு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் தேவை. அப்போதுதான் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி கேட்க முடியும்.
தமிழ்நாட்டில் தினமும் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் புதிதாக வாங்கப்படுகின்றன. இவற்றின் மூலமும் சுங்கச்சாவடிகளில் வருவாய் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி செயல்பாடு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அனைத்து சுங்கச்சாவடிகளையும் மூட வேண்டும்.
இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து தமிழகத்திலுள்ள எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதில்லை. எஞ்சிய நாளிலாவது எழுப்ப வேண்டும். ஆடு, மாடு வளர்ப்போரின் குழந்தைகளே நீட் தேர்வுக்கு தயாராகி விட்டார்கள். திமுக மட்டும் அந்தத் தேர்வை சொல்லி மக்களை ஏமாற்றுகிறது” என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
10 ஆண்டுகளாக கள்ளச்சந்தையில் மது விற்பனை – டிபன் கடை அமைத்து கொடுத்த போலீஸார்!
துணைத் தேர்வுகளுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!
புத்தம் புது அம்சங்களுடன்… வந்தாச்சு இன்பினிக்ஸ் ஜீரோ 30!