டிஜிட்டல் திண்ணை: வக்ஃப் போர்டு புதிய தலைவர் யார்? திமுகவுக்கா, கூட்டணிக்கா?

வைஃபை ஆன் செய்ததும் வக்ஃப் போர்டு தலைவர் அப்துல் ரகுமான் ராஜினாமா செய்தது பற்றிய சமூக தள விவாதங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“தமிழ்நாடு வக்ஃப் போர்டு வாரிய தலைவராக முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அப்துல் ரகுமான் திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்வு செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த அவர், கடந்த ஆகஸ்டு 19 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், இந்த ராஜினாமாவுக்குப் பின்னணியில் பல அழுத்தங்கள் அவருக்கு இருந்தன. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. அது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது.

அந்த சட்டத் திருத்தத்தில் ஓர் அம்சமாக, வக்ஃப் போர்டு அதிகாரத்தை கலெக்டர்களுக்கு கொடுப்பது இடம்பெற்றிருந்தது. இதை திமுக எதிர்க்கும் அதே நேரம்… நாடாளுமன்ற சட்ட மசோதாவுக்கு முன்பே தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரகுமான், வக்ஃப் போர்டு வாரியத்தின் முக்கிய அதிகாரங்களை கலெக்டர்களிடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தார். இது திமுகவுக்கு இக்கட்டான ஒரு நிலையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் அப்துல் ரகுமான் மீது வக்ஃப் போர்டு தொடர்பாக ஏராளமான புகார்களும் முதல்வருக்கு சென்றன. இதையெல்லாம் சேர்த்து அவரை அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்லும் முடிவுக்கு வந்தார் ஸ்டாலின். இது அதிகாரிகள் மூலம் அப்துல் ரகுமானுக்கு சொல்லப்பட்டது. ஆனால் அவரோ, ‘இது சிஎம் எனக்கு கொடுத்த பதவி. நீங்க சொல்லி எப்படி நான் ரிசைன் பண்றது?’ என்று கேட்டிருக்கிறார்.

இதையடுத்து கூட்டணிக் கட்சிகளை டீல் செய்யக்கூடிய அமைச்சர் எ.வ.வேலு,  முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீனை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இதன் விளைவாக காதர் மொய்தீனே வக்ஃப் வாரிய தலைவரான அப்துல் ரகுமானிடம் பேசி முதல்வருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் உத்தரவை அடுத்து உடனடியாக ஆகஸ்டு 19 ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பினார் அப்துல் ரகுமான். அவரது கார், பாதுகாப்பு போலீசார் உள்ளிட்ட வசதிகள் அன்றே திரும்பப் பெறப்பட்டன.

இதையடுத்து வக்ஃப் போர்டின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி இப்போது இஸ்லாமிய வட்டாரங்களில் எழுந்திருக்கிறது. முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், ‘எங்கள் கட்சியை சேர்ந்த அப்துல் ரகுமான் அப்பதவியில் இருந்தார். அவர் விலகியதை அடுத்து வேறொரு கட்சியை சேர்ந்தவருக்கு இப்பதவியைக் கொடுத்தால், அது முஸ்லிம் லீக் கட்சிக்குள் பிரச்சினையாகும். எனவே வக்ஃப் வாரிய தலைவர் பதவியை மீண்டும் எங்கள் கட்சிக்கே கொடுத்திட வேண்டும். அப்பதவிக்கு நான் மூத்த தலைவர் அபுபக்கரை சிபாரிசு செய்கிறேன்’ என்று முதல்வருக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே இது முஸ்லிம் லீக் கட்சி வகித்து வரும் பதவி என்பதால் சக இஸ்லாமிய கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி சார்பில் இப்பதவியைக் கேட்கலாமா வேண்டாமா என்று ஒரு விவாதம் நடந்து வருகிறது.

இதற்கிடையே திமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் அப்துல் வஹாப், ஆவடி நாசர் போன்றோரும் இந்த பதவிக்கு ஆர்வமாக சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். சிறுபான்மை நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தானும் முதல்வரிடம், ‘வக்ஃப் போர்டு தலைவர் பதவியை திமுகவில் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்தது போதும்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனியின் பெயரும் வக்ஃப் வாரிய தலைவர் பதவிக்கான பெயர்களில் பேசப்படுகிறது.

வக்ஃப் வாரியத்தில் ஏகப்பட்ட நிர்வாக குளறுபடிகள் நடந்திருக்கின்றன. அவற்றை சரி செய்யும் வகையில் நேர்மையான விறுவிறுப்பான தலைவரை நியமிக்க வேண்டும் என்று முதல்வருக்கு இஸ்லாமிய மூத்தவர்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

அனேகமாக முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு முன்பே வக்ஃப் வாரிய தலைவர் யார் என்பது இறுதி செய்யப்படலாம் என்கிறார்கள் வாரிய வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெண் போலீசாருக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்

உக்ரைனில் மோடி: ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை… ஒப்பந்தங்கள் கையெழுத்து!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts