முன்னிலை பெறும் மாநில உரிமைக்குரல்! முரண்களத்தில் மாநில எதிர்க்கட்சிகள் நிலை என்ன?

Published On:

| By Minnambalam Desk

ராஜன் குறை State rights voice gaining ground

தமிழ்நாட்டு அரசியலில் முன்னெப்போதும் இல்லாத அளவு ஒன்றிய அரசிடமிருந்து மாநில உரிமைகளைக் காப்பது முன்னிலை பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, கல்வி, நிதிப்பகிர்வு, ஆளுநரின் அரசியல் தலையீடு என நான்கு மிக முக்கியமான அம்சங்களில் மாநில உரிமைகளைக் காப்பது அவசியமான, அவசரமான தேவையாகியுள்ளது. State rights voice gaining ground

தமிழ்நாடு உரிமைக்குரல் எழுப்புவதில் முன்னணியில் இருந்தாலும், பல்வேறு அம்சங்களில் வேறு பல மாநிலங்களும் தமிழ்நாட்டின் குரலை எதிரொலிக்கத் துவங்கியுள்ளன. இந்தியக் குடியரசு ஒரு திருப்புமுனைத் தருணத்தில் நுழைந்துள்ளது. அதன் கூட்டாட்சித் தத்துவம் வலுப்பெறுமா, அல்லது இந்துத்துவ கருத்தியலின்படி ஒன்றிய அரசு, ஒற்றை அரசாக மாறி அதிகாரத்தைக் குவித்துக்கொள்ளுமா என்ற கேள்வி விசுவரூபம் எடுத்துள்ளது.

தன்னுடைய எழுபத்திரெண்டாவது பிறந்த நாளை மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடியுள்ள முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் மாநில உரிமைகளைக் காக்க அறைகூவல் விடுத்துள்ளார். இளைஞரணித் தலைவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் மாநில உரிமைகளைக் காக்கும் உரைவீச்சடங்கிய கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளார். நாடு சந்திக்கும் நான்கு தலையாய பிரச்சினைகள் என்னவென்று முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். State rights voice gaining ground

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு State rights voice gaining ground

நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள 542 தொகுதிகள் 1977 தேர்தலின்போது வரையறுக்கப்பட்டன. அப்போதைய மொத்த வாக்காளர் எண்ணிக்கை 32 கோடி. அதன் பிறகு குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக அமலாக்கம் செய்த மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் மறுசீரமைப்பு இருமுறை இருபத்தைந்தாண்டுகளுக்கு ஒத்திப் போடப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 கோடியை எட்டிவிட்டது. ஒட்டுமொத்த மக்கள் தொகை 140 கோடியைக் கடந்து விட்டது. State rights voice gaining ground

அதனால் சராசரியாக ஆறு லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி என்று இருந்த நிலை பதினெட்டு லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி என்று மாறிவிட்டது. இதனால் பிரதிநிதித்துவ விகிதத்தை மேம்படுத்த நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்காகத்தான் அதிக இருக்கைகள் கொண்ட புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்பதை பலரும் யூகித்துள்ளார்கள்.

பிரச்சினை என்னவென்றால், எல்லா மாநிலங்களிலும் மக்கள்தொகை அதிகரித்திருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. உத்தரப்பிரதேசம், பீஹார் உள்ளிட்ட பல வடமாநிலங்கள் அந்த அளவு கட்டுப்படுத்தவில்லை. அதனால் மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டால் வடமாநிலங்களுக்கு, தொகுதிகள் தென்மாநிலங்களைவிட அதிகமாக அதிகரிக்கும். தன் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றால் அவற்றின் அரசியல் அதிகாரம் குறையும் என்பதுதான் பொருள். நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியதற்காக தென்மாநிலங்கள் தண்டிக்கப்படும்.

இதற்கான தீர்வு என்னவென்றால் புதிய நாடாளுமன்றத்தின் தொகுதிகள் எண்ணிக்கையை நிர்ணயித்துவிட்டு, அதில் 1977 ஆண்டு இருந்த மாநிலங்களுக்கு இடையிலான விகிதாசாரப்படி அந்தந்த மாநிலங்களுக்கான எண்ணிக்கையை நிர்ணயிப்பதுதான். உதாரணமாக 542 தொகுதிகளில் தமிழ்நாட்டின் பங்கு 39 தொகுதிகள். அதன் சதவிகிதம் 7.19%. புதிய நாடாளுமன்றத்தில் 850 தொகுதிகள் இருக்கும் என்று வைத்துக்கொண்டால், தமிழ்நாட்டிற்கு 61 தொகுதிகள் தரப்பட வேண்டும். மக்கள்தொகையின்படி கொடுத்தால் 44 தொகுதிகளோ, 45 தொகுதிகளோ மட்டுமே ஒதுக்கப்படலாம். State rights voice gaining ground

இதனால்தான் பாஜக-வினர் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையாது என்று சவால் விடுகின்றனர். ஆனால், அது 39-ல் இருந்து 45 தொகுதிகளாக மாறினால் தற்போதுள்ள பிரதிநிதித்துவ சதவிகிதத்தை கடுமையாக இழக்கும். அதனால் தற்போது எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு சதவிகிதத் தொகுதிகள் இருக்கின்றனவோ, அதே சதவிகிதத்தில் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியதற்காக மாநிலங்கள் தண்டிக்கப்படும். State rights voice gaining ground

இப்படி நடந்தால் எதிர்காலத்தில் தங்கள் அரசியல் முக்கியத்துவத்தை அதிகரிக்க மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க முனையும் பேராபத்தும் உருவாகலாம். எனவே நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்பது கூட்டாட்சிக் குடியரசின் தலைமீது தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி. இதில் 1977 மாநில விகிதாசாரமே தொடரும் என ஒன்றிய அரசு உடனே அறிவிக்க வேண்டும்.

கல்வி State rights voice gaining ground

கல்வியில் அனைத்து முனைகளிலும் மாநில உரிமைகளைப் பறிக்க முனைந்துள்ளது ஒன்றிய அரசு. உயர்கல்வியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் உரிமையைப் பறிக்கிறது. பள்ளிக்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் மேம்பாட்டு நிதிகளை தர மறுக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்பது போன்ற பல பிற்போக்குக் கொள்கைகள் உள்ளன. State rights voice gaining ground

இதில் மிக முக்கியமான பிரச்சினை மும்மொழிக் கொள்கை என்பது. பெருவாரியான எளிய, உழைக்கும் வர்க்கக் குழந்தைகள் அவர்களுக்குள்ள சமூக, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுடன் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளைப் படிப்பதற்கே மிகுந்த சோதனைக்கு உள்ளாகின்றனர். அவர்களில் அறுதிப் பெரும்பாலோர் தமிழ்நாட்டில்தான் பணியாற்றப் போகின்றனர்.

அந்த நிலையில் அவர்களுக்கு மூன்றாவது மொழி என்பது முற்றிலும் தேவையில்லாத சுமை என்பதுடன் அவர்களுடைய ஒட்டுமொத்த கல்வியையும் பெருமளவு பாதித்துவிடும் வாய்ப்புகளே அதிகம். யாருக்கெல்லாம் அப்படி வேறு மொழிகளைக் கற்கும் தேவையும், வாய்ப்பும் இருக்கிறதோ அவர்கள் சுலபமாக தனிப்பட்ட முறையில் அதனைக் கற்கப் போகிறார்கள். அதை பள்ளிப்பாடத் திட்டத்தில் அனைவருக்கும் கட்டாயமாக்குவது முற்றிலும் தேவையற்றது.

உலகில் அனைத்து முன்னணி கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துவதுடன், தேவைப்பட்டால் ஒரு தொடர்பு மொழியைக் கற்கலாம் என்றுதான் கூறுகின்றனர். மூன்றாவது மொழி கற்பதை கட்டாயமாக்குவதை எந்தக் கல்வியியல் ஆய்வாளரும் வரவேற்க மாட்டார்.

ஏற்கனவே, மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நீட் தேர்வை கட்டாயமாக்கி பல எளிய குடும்பத்து பிள்ளைகளை நிராசையால் தற்கொலை செய்துகொள்ள வைத்துள்ளது ஒன்றிய அரசு. மாநில அரசு முறையான ஆய்வுக்குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளின் பேரில் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி சட்டமியற்றியும் அதனை கிடப்பில் போட்டு வைத்துள்ளது ஒன்றிய அரசு. கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டுமே மாநிலப் பட்டியலில் இருந்தாலும் ஆல் இண்டியா மெடிக்கல் கவுன்சில் என்பதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில உரிமைகளைப் பறிக்கிறது.

நிதிப்பகிர்வு State rights voice gaining ground

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் தங்கள் தொலைநோக்குள்ள மனிதவள மேம்பாட்டு முயற்சிகளால் பொருளாதார வளர்ச்சியை சாதித்துள்ள நிலையில் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கான விழைவுகளும் பெருகியுள்ளன. ஆனால், அவற்றை நிறைவேற்ற இயலாதபடி நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாய்க்கு ஏற்ப அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய பாஜக அரசு மறுக்கிறது.

வெளிப்படையாகவே மாநிலத்திலும் தங்களை, பாஜக-வை, ஆள அனுமதித்தால்தான் வளர்ச்சிக்கு உதவுவோம் என்று “டபுள் இஞ்சின் சர்க்கார்” என்ற பெயரில் பிளாக்மெயில் செய்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரான இந்த டபுள் இஞ்சின் சர்க்கார் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ, ஊடகங்களோகூட தட்டிக் கேட்பதில்லை.

சென்னையின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியதாகச் சொன்ன பணத்தைக் கூட விடுவிக்க மறுக்கிறது. பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்டாலும், வீதிகளில் இறங்கி போராடினாலும் இறுமாப்புடன் செவிசாய்க்க மறுக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றிலே ஒன்றிய அரசினை முழுக்க முழுக்க அரசியல்மயப்படுத்தியுள்ளது பாஜக அரசு. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், நாடாளுமன்ற பெரும்பான்மையின் அடிப்படையில் எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது. அதன் இந்து ராஷ்டிர கனவுக்கு எதிராக உள்ள திராவிட-தமிழ் மக்கள் தொகுதியின் மீது வெஞ்சினம் கொண்டு இயங்குகிறது.

ஆளுநரின் அரசியல் தலையீடு State rights voice gaining ground

ஆளுநர் தொடர்ந்து மாநிலத்தின் மக்கள் பிரதிநிதிகள் இயற்றிய சட்டங்களுக்கு அனுமதி தர மறுக்கிறார். துணைவேந்தர் நியமனங்களைத் தடுக்கிறார். பல்கலை நிர்வாகங்களைச் சீர்குலைக்கிறார். தொடர்ந்து ஓர் அரசியல்வாதி போல கருத்தியல் பிரச்சாரம் செய்கிறார். மாநில அரசை பொதுவெளியில் விமர்சிக்கிறார். கடந்த அரசாங்கத்தின் மந்திரிகள் மீதான ஊழல் குறித்த விசாரணைகளை அனுமதிக்க மறுக்கிறார். மாநில அரசின் உரையை சட்டமன்றத்தில் வாசிக்க மறுக்கிறார். உச்ச நீதிமன்றத்திலேயே தனக்கு இல்லாத அதிகாரங்கள் இருப்பதாக சவால் விடுகிறார்.

மொத்தத்தில் அரசியலமைப்பு சட்ட நெருக்கடியைத் திட்டமிட்டு உருவாக்குகிறார். மாநில அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். 

திராவிட மாடல் அரசின் நல்லாட்சி State rights voice gaining ground

இத்தனைக்கும் இடையில் ஏராளமான மக்கள்நலத் திட்டங்களை நான்காண்டுகளில் நிறைவேற்றியுள்ளது தி.மு.க அரசு. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், சமீபத்தில் முதல்வர் மருந்தகங்கள், பண்பாட்டுத் தளத்தில் கீழடி அருங்காட்சியகம், அகழாய்வுகளில் வேகம், பிரம்மாண்டமான நூலகங்கள், இலக்கிய விழாக்கள், சர்வதேச புத்தகச்சந்தை என தடம் பதித்துள்ளது மட்டுமன்றி, பெருமளவு முதலீடுகளை ஈர்த்து பரவலான தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிக்கைகளே தொடர்ந்து மாநில அரசின் செயல்பாடுகளைப் பாராட்டும் நிலையே நிலவுகிறது. 

மாநில எதிர்க்கட்சிகளின் நெருக்கடி 

அகில இந்திய அளவில் பாஜக-வின் பாசிச போக்கினை எதிர்த்து உருவாகியுள்ள இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளன தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட பிற அமைப்புகளும். அதனால் மாநில அரசியலிலும் அந்தக் கூட்டணி வலுவாக மாநில நலன்களையும், கூட்டாட்சி தத்துவத்தையும் காக்க போராடி வருகின்றன. State rights voice gaining ground

இதனால் பாஜக அல்லாத மாநில எதிர்க்கட்சிகள் பெரும் அரசியல் நெருக்கடியை சந்திக்கின்றன. அவற்றால் மாநில நலன்களுக்கு எதிராக நாள்தோறும் இயங்கும் பாஜக-வுடன் கூட்டணி அமைக்க முடியாது. பாஜகவினர் வெளிப்படையாக இந்தி மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பேசுகின்றனர். அறுபதாண்டுகளுக்கு முன்னால் எண்ணற்றோர் உயிர்த்தியாகம் செய்து உருவாக்கிய இருமொழிக் கொள்கையைக் கொன்று புதைத்து தமிழ்நாட்டில் இந்தி காலனியாதிக்கத்தை உருவாக்க நினைக்கின்றனர். இந்த நிலையில் பாஜக-வுடன் கூட்டணி வைப்பது மாநில எதிர்க்கட்சிகளுக்கு தற்கொலைக்கு நிகராகும். 

அதே சமயம், மாநில நலன்களை காக்க முன்னுரிமை அளிப்பதா அல்லது தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்வதா, எந்த அடிப்படையில் தி.மு.க-வை எதிர்ப்பது என்பதில் அவை பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. அதனால் அவை அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை ஆவேசமாக தி.மு.க அரசை நோக்கி வீசுகின்றன.

நீட் தேர்விலிருந்து விலக்களிக்க முறையாக சட்டம் இயற்றியும் அதனை அங்கீகரிக்காத ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் எழுப்பாமல், ஏன் நீட் விலக்கு பெறவில்லை என்று தி.மு.க-வையே குற்றம் சாட்டுகின்றன. அதே போல ஏன் நிதிப்பகிர்வை போராடிப் பெறவில்லை என்று கேட்கின்றன.

இன்னும் பித்து அதிகரித்து தி.மு.க-வும், பாஜக-வும் ஒன்றையொன்று எதிர்ப்பது போல நாடகமாடுகின்றன, ‘புரோ’ என்று விரக்தியில் பிதற்றுகின்றன. ஆர்.எஸ்.எஸ் தோன்றிய அதே ஆண்டில் துவங்கியதுதான் சுயமரியாதை இயக்கம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அண்ணாவின் ஆரிய மாயை என்ற அறிய கொள்கை பிரகடனத்தை, திராவிட இயக்க மானிஃபெஸ்ட்டோவை படித்திருந்தால் அவர்களுக்கு எது இந்தியாவின் ஆதி அரசியல் முரண் என்று புரியும். ஆட்சி புரியும் ஆசைக்காக அற்ப கற்பனைகளை பேசித் திரிவதை தவிர்ப்பதுதான் அவர்களுக்கு நல்லது.

அடுத்ததாக மிக மோசமான மற்றொரு வழிமுறையைப் பின்பற்றுகின்றன. தனி நபர் குற்றங்களை சட்ட ஒழுங்கு பிரச்சினையாக மாற்ற முயற்சி செய்கின்றன. கடந்த ஐம்பதாண்டுகளில் பாலியல் குற்றங்கள், கள்ளக்காதல் கொலைகள், பெண் வெறுப்புக் குற்றங்கள் இடம்பெறாத செய்தித்தாள் ஒரு நாளாவது வெளியாகியிருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

எந்த அரசாலும் எட்டு கோடி பேரின் நன்னடத்தையை உறுதி செய்ய முடியாது. குற்றங்கள் குறித்த நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றால் கேள்வி கேட்கலாம். ஒவ்வொரு தனிநபர் குற்றச் செயலுக்கும் அரசியல் பின்புலம் இருப்பதாக கற்பிப்பதும், அரசை பொறுப்பாக்கி முழங்குவதும் பொறுப்புள்ள செயல்கள் அல்ல. ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சுவாதி கொலை வழக்கையும், அதில் அழுத்தத்துக்கு பணிந்து பலிகடாவாகக் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் மர்ம மரணத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். State rights voice gaining ground

எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களை தி.மு.க-விற்கு மாற்றாக முன்னிறுத்திக் கொள்ளட்டும். நாங்கள் மேம்பட்ட ஆட்சி தருவோம் என்று கூறட்டும். மக்களுக்கு ஆட்சி மேல் அதிருப்தி இருந்தால் வாய்ப்பளிப்பார்கள். அதற்குப் பதிலாக மாநில உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரத்தில். தி.மு.க-வை நோக்கி அபாண்டமான பழிகளை, அபத்தமான குற்றச்சாட்டுகளை சுமத்துவது பொறுப்புள்ள அரசியல் ஆகாது. State rights voice gaining ground

கட்டுரையாளர் குறிப்பு:  

State rights voice gaining ground by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share