மணிப்பூர் மாநிலத்தில் என்.பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு கடந்த சில மாதங்களாக பெரும்பான்மைச் சமூகமான ‘மைதேயி’ இன மக்களுக்கும், பழங்குடிச் சமூகமான ‘குகி’ இன மக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
இச்சூழலில் தான் ‘குகி’ இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்தபடி இழுத்து செல்லும் வீடியோ ஒன்று நேற்று (ஜூலை 19) சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்றது கடந்த மே மாதம் 4 ஆம் தேதி. ஆனால் காவல்துறை இது தொடர்பாக யாரையும் இன்னும் கைது செய்யவில்லை என்று கூறப்பட்டது.
மேலும், எதிர்க்கட்சிகளும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.
இந்நிலையில், நேற்று இரவு இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார் என்று மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “அந்த வீடியோவைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது மனித குலத்துக்கே எதிரான குற்றம்.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்ய உடனடியாக உத்தரவிட்டேன். மேலும், அந்தக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்த மாநில அரசு முயற்சி செய்யும்.
ஒவ்வொரு மனிதனும் அந்தக் குற்றவாளிகளைக் கண்டிக்க வேண்டும். நேற்று இரவு முக்கியக் குற்றவாளியை நாங்கள் கைதுசெய்துவிட்டோம்” என்றார்.
முன்னதாக, இந்த கொடூர சம்பவத்திற்கு மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம் என்று உச்சநீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மணிப்பூர் கொடூரம்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்!
“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம்” – ரகுபதி