மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் ஒன்றாக இணைந்து வரி கட்டும் மக்களின் அளவை விரிவுபடுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
சென்னையில் வருவாய் வழக்கறிஞர்களின் சங்கம் இன்று (செப்டம்பர் 5) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
அவர் உரையாற்றுகையில், “நீங்கள் (வருவாய், வரி சம்பந்தமான வழக்குகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள்) எடுத்து வாதாடும் வழக்குகள், மத்திய நிதி அமைச்சகம் எடுக்கும் முடிவுகளை நேரடியாக பாதிக்கிறது. ஜிஎஸ்டி போன்ற ட்ரிபியுனல் உருவாக்கியதிலும் பங்கு இருக்கிறது.
அரசுக்கும் மக்களுக்கும் இடையில் நீங்கள் பாலமாக இருக்கிறீர்கள். இந்தியாவை வளர்ச்சியைடைய செய்வதுதான் பிரதமரின் நோக்கம்.
அதற்காக வரி கட்டும் முறையை எளிமைப்படுத்துவதும், வரி ஏய்ப்பை தவிர்ப்பதும் தான் அவரது முதல் முன்னுரிமை. அதற்கு பின்பு தான் வருவாய் குறித்து அவர் சிந்திப்பார்.
வரி விதிப்பு விவகாரத்தில், கூட்டாட்சி அமைப்பு மதிக்கப்படுகிறது. மக்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் நாட்டின் வருவாயை உயர்த்துவதற்கு, கூட்டாட்சி அமைப்பு மிக அவசியம். இதற்கு மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் ஒன்றாக இணைந்து வரி கட்டும் மக்களின் அளவை விரிவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வரி விஷயத்தில் எப்போதுமே சண்டைதான் என்று எதிர்கட்சிகள் சொல்லி வருகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை.
ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் என்ன நடக்கிறது என்று எனக்கு தான் தெரியும். ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்களும், வரி கட்டும் முறையை எளிமைப்படுத்தி, எப்படி வருவாயை கூட்டலாம் என்று தான் அங்கு யோசிக்கிறார்கள்.
2017 ஜிஎஸ்டி அறிமுகம் படுத்திய போது, வரிவிதிப்பு விகிதம் 15.5 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023 யின் நிலவரபடி சராசரி ஜிஎஸ்டி வரியின் அளவு 12.2% ஆக குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி மக்களை பாதிக்கிறது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது உண்மை இல்லை. ஜிஎஸ்டி வருவதற்கு முன், நீங்கள் வாங்கும் பொருட்களின் ரசீதுகளில் வரியின் அளவு குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஜிஎஸ்டிக்கு பின் , எந்த வரி எங்கு செல்கிறது என்று தெளிவாக அச்சடிக்கப்பட்டுவருகிறது. அதுதான் வித்தியாசம்.
ஒவ்வொரு மாதமும், எவ்வளவு ஜிஎஸ்டி வந்துள்ளது என்று நிதி அமைச்சகம் வெளியிட்டால், மத்திய அரசு ஜிஎஸ்டியை கொண்டாடுகிறது என்று எதிர்கட்சியினர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்கள் தான் வெளிப்படை தன்மை வேண்டும் என்று சொல்கிறார்கள். பின்பு நாங்கள் என்னதான் செய்வது?
60% மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் 5 அல்லது அதற்கும் குறைவாக தான் ஜிஎஸ்டி விதிக்கிப்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
2013-14 காலத்தில், tax return processing date 93 நாள்களாக இருந்தது. ஆனால் இப்போது அது 10 நாள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் நிலையான விலக்கை அதிகரித்துள்ளோம்.
கொரோனா காலத்தில் கூட வரி அதிகரிக்கப்படும் என்று மக்கள் பயந்தார்கள். ஆனால் எந்த வரியும் ஏற்றக்கூடாது என்று பிரதமர் சொல்லியிருந்தார்.
வரி விதிப்பு முறையை பற்றி நீங்கள் சமூகவலைதளங்களில் பேச வேண்டும். உங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு பழக்கப்படுத்திகொள்ள வேண்டும். அது மக்களுக்கு பயன் அளிக்கும்” என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: ஊரக உள்ளாட்சித் தேர்தல்… ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு!
சுப முகூர்த்தம் : பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு!