மாநில தேர்தலும், தேசிய கட்சிகளும்: கர்நாடகா புலப்படுத்தும் மக்களாட்சி காட்சிகள்!

Published On:

| By Minnambalam

ராஜன் குறை

இந்தியாவிலேயே இரண்டு மாநில கட்சிகள் மட்டுமே தங்களுக்குள் போட்டியிட்டு மாறி, மாறி ஐம்பத்தாறு ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலம் என்று தமிழகத்தை மட்டும்தான் கூற முடியும். தமிழ்நாட்டில் அரசியல் என்பதே மாநில அரசியல்தான்; ஒன்றிய அரசியலில் பங்கெடுப்பதும் மாநில கட்சிகளாகத்தான்.

தேசிய கட்சிகள் என்பவை தமிழ்நாட்டில் மாநில கட்சிகளின் கூட்டணியில் இடம்பெறும் துணை கட்சிகள்தானே தவிர, அவை முதன்மை பெறுவதில்லை. ஜெயலலிதா மரணமடைந்த பின் கடந்த ஏழாண்டுகளில் பாரதீய ஜனதா கட்சி, அ.இ.அ.தி.மு.க தலைவர்களை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்து பல பொம்மலாட்டக் காட்சிகளை அரங்கேற்றினாலும், அ.இ.அ.தி.மு.க என்ற கட்சியினை அகற்றி விட்டு அந்த இடத்தை மக்கள் மன்றத்தில் கைப்பற்ற இயலாது என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

அதாவது எடப்பாடி பழனிசாமி கருத்தியல் அளவில் பாஜக-வை எதிர்க்கத் துணியாமல் அடிபணிந்து நடக்கலாம்; ஓ.பன்னீர்செல்வம் பாஜக சொல்வதை எல்லாம் கேட்கலாம்; ஆனாலும் பாஜக அப்படி மறைமுகமாகத்தான் செல்வாக்கு பெறலாமே ஒழிய, நேரடியாக மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்ற வியத்தகு நிலையே இன்றுவரை நிலவுகிறது. அதைப் பயன்படுத்தியே எடப்பாடி பழனிசாமி பாஜக-வுடன் பேரம் பேசி வருகிறார்.

தமிழ்நாட்டுக்கு வெளியே மாநில கட்சிகளே தங்களுக்குள் போட்டியிட்டுக் கொள்வது என்பது ஓரளவு ஆந்திரா, தெலங்கானா, காஷ்மீர் ஆகிய சில மாநிலங்களில் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் பிரிந்தவர்கள், சந்திரசேகர ராவ், ஜெகன் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களிலும் தேசிய கட்சிகளின் ஊடுருவல் கணிசமாக உள்ளது.

பீஹாரில் நிதிஷ் குமார், லாலு யாதவ் இரு பெரும் சக்திகளாக இருந்தாலும் நிதிஷ் குமார் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தார் என்பதால் அது தேசிய கட்சியின் ஊடுருவலுக்கு இடம்கொடுத்த மாநிலமாகவே விளங்குகிறது. சுருங்கச் சொன்னால் தமிழ்நாடு அளவு நீண்ட காலமாக வேரூன்றிய மாநில அரசியல் கட்சிகளே மோதிக்கொள்ளும் நிலை பிற மாநிலங்களில் இல்லை.  

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் வலுவாக இருந்தாலும் அவை தேசிய கட்சிகளுடன் மோதுகின்றன. உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மஹாராஷ்டிரத்தில் சிவசேனா, பஞ்சாபில் அகாலி தளம் உள்ளிட்டவை தேசிய கட்சிகளுடன் மோதுகின்றன.

கர்நாடக மாநிலத்தின் நிலை வித்தியாசமானது. இங்கு மாநிலத்தின் சமூகவியல் கூறுகளே அரசியலைத் தீர்மானித்தாலும், தேசிய கட்சிகள்தான் நேரடியாக மோதிக்கொள்கின்றன. ஆளும் பாரதீய ஜனதா கட்சியும், இந்திய தேசிய காங்கிரஸும்தான் எதிரெதிர் அணியாக உள்ளன. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும் தன்னை மாநில கட்சியாக முன்னிறுத்திக் கொள்வதில்லை. இப்போது நடைபெறும் தேர்தலில் தங்களுக்காக பிரச்சாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்தது மதச்சார்பற்ற ஜனதா தளம். அந்த அளவு “தேசிய அரசியல்” முலாம் கர்நாடகாவில் தேவைப்படுகிறது.

இதையெல்லாம் கணக்கில் கொண்டால் இந்திய மாநிலங்களில் மக்களாட்சி அரசியலை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

இந்த மூன்று வகைகளில் எது மக்களாட்சிக்கு நல்லது? கர்நாடகா நமக்கு உணர்த்தும் உண்மைகள் என்ன?

கர்நாடக அரசியல் குழப்பங்கள்

கர்நாடக மாநில அரசியல் வரலாற்றை நோக்கினால் அங்கே நீடித்த செல்வாக்குள்ள வெகுஜன தலைவர்கள் யாரும் உருவாகவில்லை என்பதைக் காணலாம். முழுமையாக ஐந்தாண்டுக் காலத்தை முதல்வராக நிறைவு செய்த நிஜலிங்கப்பா, தேவராஜ் அர்ஸ் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட, மீண்டும் இன்னொரு ஐந்தாண்டுக் காலம் ஆட்சி செய்ய முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியினுள் நிறைய குழுச் சண்டைகள், பிரிவுகள். குண்டு ராவ், பங்காரப்பா என்று பிற்கால தலைவர்கள் யாருமே நிலைத்திருக்கவில்லை. காங்கிரஸுக்கு மாற்றாக 1977இல் உருவான ஜனதா கட்சியும் பின்னாளில் பல பிளவுகள், பிரிவுகள் என சிதறியது. ஹெக்டே, தேவ கெளடா உள்ளிட்ட தலைவர்களால் அனைத்து மக்களையும் அணியாக்க முடியவில்லை.

ஆந்திர காங்கிரஸில் இப்படி ஒரு நிலை இருந்தபோதுதான், என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் என்ற மாநில கட்சியை உருவாக்கி பெரு வெற்றி பெற்றார். ஆனால், கர்நாடகத்தில் அவருக்கு இணையான பிரபல நடிகரான ராஜ்குமார் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. பல்வேறு கன்னட அமைப்புகள் உருவானாலும், ஒரு மாநில கட்சியாக எதுவுமே நிலைபெறவில்லை.

இதனால் கர்நாடக அரசியலில் சில பிரச்சினைகள் உருவாயின. ஒன்று பிரதேச வாரியான ஜாதி பெரும்பான்மை வாக்கு வங்கி அரசியலைத் தீர்மானிப்பதாக மாறியது. லிங்காயத்துக்கள் என்ற செல்வாக்கு மிக்க பிரிவினர் கணிசமாக உள்ள வட மாவட்டங்களில் பாரதீய ஜனதா கட்சி காலூன்றியது. எடியூரப்பா அதன் தலைவரானார். வொக்கலிக சமூகத்தினர் அதிகமாக உள்ள தென் மாவட்டங்களில் தேவ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேரூன்றியது. காங்கிரஸுக்கு பரவலாக செல்வாக்கு இருந்தாலும், அதுவும் ஜாதி சார்ந்த வாக்கு வங்கிகளின் கணக்கையே பின்பற்ற வேண்டியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்

மற்ற தென்னிந்திய மாநிலங்களில் கால்பதிக்க முடியாத பாரதிய ஜனதா கட்சி கர்நாடக அரசியலின் சிதறுண்ட தன்மையைப் பயன்படுத்தி அதன் வழமையான இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க தொடங்கியது. அத்துடன் லிங்காயத்து மடங்களின் ஆதரவையும் பெற்றது. தொண்ணூறுகளுக்குப் பிறகு ஏற்பட்ட பெருமுதலீட்டிய வளர்ச்சியின் காரணமாக, பெருமுதலீட்டிய ஆதரவு கட்சி என்ற அடிப்படையிலும் அது வலுப்பெற்றது.

ஒன்றிய அரசில் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி, அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி, தாங்கள் தேசபக்தியுள்ள லட்சியவாத கட்சி என்ற பிம்பத்தை கட்டமைத்தது. ஆனால் கர்நாடகாவில் அதே நேரத்தில் அது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியது. அதனை சமாளிக்க ஊழல் வழக்கில் சிக்கிய எடியூரப்பாவை கட்சியை விட்டு விலக்கியது. ஆனால், அவர் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்பதால் மீண்டும் அவரை சேர்த்துக்கொண்டது.

அப்படியும் கூட அதனால் 2018ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆதரிக்க முன்வந்ததால் குமாரசாமி கூட்டணி அரசின் முதல்வரானார். ஆனால் எடியூரப்பா வரலாறு காணாத குதிரை பேரத்தில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மீண்டும் பாஜக ஆட்சியை உருவாக்கினார்.

அதன் பிறகு எடியூரப்பா ஆட்சியிலும் சரி, அவருக்கு அடுத்த எஸ்.ஆர்.பொம்மை ஆட்சியிலும் சரி… கர்நாடக அரசு வரலாறு காணாத ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அரசுப் பணிகளை செய்ய காண்டிராக்ட் எடுத்தவரே, ஊழல் பெருச்சாளிகளை தாங்க முடியவில்லை என்று தற்கொலை செய்து கொள்ளுமளவு ஊழல் தலைவிரித்தாடியுள்ளது.

இதிலிருந்து மக்களை திசை திருப்ப இஸ்லாமிய வெறுப்பு அரசியலை மட்டுமே பாஜக நம்புகிறது. இஸ்லாமிய கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. இப்போது திப்பு சுல்தான் பற்றிய போலி வரலாற்று கதைகளை உருவாக்கி, வொக்கலிக சமூக இளைஞர்கள்தான் அவரை கொன்றார்கள் என்று சொல்லி, இஸ்லாமிய வெறுப்பரசியலை அந்த சமூகத்திலும் பரப்புவதற்கு முயற்சி செய்கிறது.

State Elections and National Parties

ஈஸ்வரப்பாவின் சர்ச்சைகள்

கர்நாடக அமைச்சர்களில் ஒருவரும், மாநில பாஜக தலைவர்களில் ஒருவருமான ஈஸ்வரப்பா சர்ச்சைகளை உருவாக்குபவர். சமீபத்தில் தமிழர்கள் அதிகமுள்ள தொகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தி சர்ச்சையை உருவாக்கினார். அதற்கு ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டாலும். அடிப்படையில் கன்னட மொழி அடையாளம் காரணம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

பிரச்சினை என்னவென்றால் மற்றொரு கூட்டத்தில் ஈஸ்வரப்பா முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை என்று பேசியிருப்பதுதான். மக்களாட்சியில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அனைத்து மக்களின் வாக்குகளையும் பெறத்தான் முயற்சிக்குமே தவிர, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை என்று பேச மாட்டார்கள்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது என்றால் கன்னட உணர்வு இருந்தாலும் கூட. அதில் பாஜக முஸ்லிம்களை இணைத்துக் கொள்வதில்லை என்று தோன்றுகிறது. அவர்கள் அரசியலுக்கு கன்னட அடையாளத்தைவிட இந்து அடையாளமே முக்கியமாக இருக்கிறது.

இதுதான் மாநில கட்சிகள் உருவாகாமல் போனதன் பிரச்சினை. தமிழ்நாட்டிலோ, தெலங்கானாவிலோ, ஆந்திராவிலோ இப்படி சிறுபான்மையினர் வாக்குகள் தேவையில்லை என்று பேச வாய்ப்பேயில்லை. ஏனெனில் அந்தந்த மாநிலங்களின் மொழி அடையாளத்தில் முஸ்லிம்களுக்கும் பங்கு உண்டு. அந்த பகுதியின் கலாச்சாரத்தில் பங்கு உண்டு. தமிழ்நாட்டு மாநில அரசியலில் முஸ்லிம்கள் முழுமையாக பங்கெடுப்பவர்கள். திராவிட கட்சிகள் ஒருபோதும் அவர்களை திராவிட தமிழ் அடையாளத்திலிருந்து விலக்கியதில்லை.

State Elections and National Parties

மாநில அரசியலே மக்களை ஒருங்கிணைக்கும்!

கர்நாடகாவில் கன்னட மொழியுணர்வு பரவலாக விளங்கினாலும், அது மாநில அரசியலாக உருவாகவில்லை. அதன் காரணமாக அங்குள்ள மக்கள் ஜாதி, மத அடையாளங்களை கடந்த அரசியல் அணிகளாக மாறவில்லை என்றுதான் தெரிகிறது. ஈஸ்வரப்பாவால் முஸ்லிம் ஓட்டுக்கள் தேவையில்லை என்று அதனால்தான் கூறமுடிகிறது. பாஜக லிங்காயத்து ஆதரவு பெற்ற கட்சி, மஜத வொக்கலிக சமுதாய கட்சி என்று அடையாளப்படுத்த முடிகிறது.

ஒப்பு நோக்குகையில் தமிழ்நாட்டு அரசியலில் ஜாதி பெரும்பான்மை பிரதேசங்கள் இல்லையென்று கூற முடியாது. வட மாவட்டங்களில் கணிசமாக உள்ள ஜாதி. மேற்கு மாவட்டங்களில் கணிசமாக உள்ள ஜாதி, தெற்கு மாவட்டங்களில் கணிசமாக உள்ள ஜாதி என்று அடையாளப்படுத்த முடியத்தான் செய்கிறது. ஆனால் அரசியல் அணி சேர்க்கைகள் முழுமையாக அந்த அடையாளங்களுக்குள் அகப்படுவதில்லை.

முக்கிய கட்சிகளான தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டுமே அனைத்து ஜாதி, மத அடையாளங்களையும் அணி சேர்க்கும் கட்சிகளாகவே விளங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலும் இந்தக் கட்சிகளே அரசியல் முரணை தீர்மானிக்கின்றன. ஜாதி அடையாள, பிரதேச அடையாள, மத அடையாள கட்சிகள், அமைப்புகள் கூட இந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையே உள்ளது.

State Elections and National Parties

இதற்கான காரணம் “திராவிட தமிழர்” என்ற மக்கள் தொகுதியினை அரசியல் மோதலின் களமாக திராவிட இயக்கம் கட்டமைத்ததுதான். அதாவது திராவிட, தமிழ் அடையாளத்தின் கீழ்தான் இங்கே அரசியல் செய்ய முடியும். அதனால் ஜாதி, மத அடையாளங்களை உள்ளடக்கிய, ஆனால் அவற்றைக் கடந்த அரசியல் முரண்களே இங்கே அரசியலை உருவாக்கும் என்ற நிலை சாத்தியமாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் தேசிய அணிகளின் மோதல் களமாக உள்ளதால் அங்கே ஜாதி, மத அடையாளங்களும் முரண்பாடுகளுமே அரசியல் முரணையும் தீர்மானிப்பதாக மாறும் நிலையைப் பார்க்க முடிகிறது. இது மக்களாட்சிக்கு பெரும் பின்னடைவு என்றுதான் கூற முடியும். மாநில அடையாளம் அரசியல் முரணின் களமானால்தான் ஜாதி, மத அடையாளம் கடந்த அணி சேர்க்கைகள் சாத்தியமாகி மக்களாட்சி வலுப்பெறும்.

கட்டுரையாளர் குறிப்பு:

State Elections and National Parties RajanKurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கேரள பலாப்பழ அல்வா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share