மாநில கல்விக் கொள்கை குழு அறிக்கை ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் ஈரோட்டில் இன்று (டிசம்பர் 17) நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 4.8 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க 9.83 கோடி மதிப்பீட்டில், புதிய எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் அனைவரும் கல்வி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவாகும்.
பள்ளிகளில் விளையாட்டு நேரத்தில் மற்ற பாடங்கள் நடத்த கூடாது என அறிவுறுத்தி இருக்கின்றோம். விளையாட்டு வகுப்புகளில் விளையாட்டுகளை மட்டுமே மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றோம்.
மாநில கல்வி கொள்கை தொடர்பான குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளனர். துறை சார்ந்த கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
டிசம்பர் மாத இறுதிக்குள் கருத்து கேட்பு முடித்து ஜனவரி மாதத்தில் அறிக்கையை முதல்வரிடம் வழங்குவார்கள். இந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் முடிவு செய்வார்.
பள்ளிகளில் போதை பொருள் பயன்பாடு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டு விட்டனர். தற்போது மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்..
டிஆர்பி மூலம் 9300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2013 ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு பணி வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். அதனை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளோம். துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காலை சிற்றுண்டி திட்டம் முதல் கட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் கட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். 1545 பள்ளிகளில், ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்களுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தை நிறுத்துவதற்கான எண்ணம் இல்லை. வசதியற்ற மாணவர்களுக்கு இது மிகப்பெரும் வரப்பிரசாதமான திட்டமாக இருக்கிறது.
இன்றைக்கும் ஜார்க்கண்ட் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மாலை நேரத்தில் ஒன்றரை மணி நேரம் மாணவர்களை புத்துணர்வு செய்வதற்கான ஒரு திட்டம். அவர்களுக்கு தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.
கலை.ரா
அவர் குண்டாக இருக்கிறார்: இந்திய வீரரை விமர்சித்த பாக்.வீரர்!
சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் நாளை இயங்கும்!