-ரகசிய ஆவணம் அம்பலம்!
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் தீபாவளி பண்டிகையின் போது தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு போலீசின் உள் பாதுகாப்பு பிரிவு (InternalSecurity) ஜூலை மாதமே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில் கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபீனின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் தேதி மாநிலத்தின் உள் பாதுகாப்பு பிரிவு தமிழகத்தில் உள்ள காவல் ஆணையரகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
நமக்கு பார்க்கக்கிடைத்த அந்த அறிக்கையில், ‘96 நபர்களின் பெயர், புகைப்படம், அவர்களின் இருப்பிடம், அவர்கள் எந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளார்கள் என்ற தகவல்கள் விரிவாக இருந்தன.
கோவை, சென்னை, நெல்லை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள சந்தேக நபர்களின் அனைத்து விவரங்களும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த அறிக்கையில் மேற்கண்ட நபர்களை அந்தந்த எல்லையில் உள்ள காவல் நிலையங்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த குறிப்பாணையில், குறிப்பிடப்பட்டுள்ள 96 நபர்கள் “ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிற அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவாளர்களாகவும் அதன் சித்தாந்தங்களை உள்வாங்கியவர்களாகவும் உள்ளார்கள்.
இவர்கள் தமிழ்நாட்டில் தீவிரவாத சதிச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், இவர்களின் தொடர்புகள் அனைத்தும் கண்காணிக்கப்பட வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதில் கோவை கார் வெடி விபத்தில் பலியான ஜமேஷா முபீனின் பெயர் 89 வது நபராக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பின் 11 நாட்கள் கழித்து, ஜூலை 30 ஆம் தேதி மீண்டும் ஒரு சுற்றறிக்கையை தமிழ்நாடு போலீசின் உள் பாதுகாப்பு பிரிவு அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது தீவிர ஈடுபாடு உள்ளவர்கள் இருப்பதாகவும்,
இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் இடம் பயிற்சி பெற்ற சிலரிடம், தமிழகத்தில் உள்ள சில இசுலாமிய இளைஞர்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளதாகவும்,
அடிப்படை இசுலாமிய கோட்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு அரசை நிறுவுவதே இவர்களின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அவர்கள் எவ்வாறு தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் எச்சரித்திருந்தது.
மேலும், “தமிழகத்தின் முக்கியமான இந்து பண்டிகை நாட்களில், தனியாகவோ (lone Wolf), சிறு குழுவாகவோ (nucleus) சேர்ந்து வெடி மருந்து நிரப்பப்பட்ட கார், அல்லது வேறு வாகனங்களை கொண்டு, பொது இடங்களில் வெடிக்கச்செய்யும் யுக்திகளை கையாளக்கூடும்” என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை இருந்தது.
இதனால் பொது இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும், சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிப்பில் வைக்கவும், மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென, அவ்வறிக்கையில் அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது.
கோவை கார் வெடிப்பிற்கு 98 நாட்களுக்கு முன்னதாகவே ஜமேஷா முபீனின் பெயரை குறிப்பிட்டு தமிழக காவல் துறையின் ஒரு பிரிவே எச்சரிக்கை விட்டிருந்தும், முபீனை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வராமல் கோவை போலீசார் மெத்தனமாக இருந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
வினோத் அருளப்பன்
உருவபொம்மை எரிப்பு : திமுகவினருக்கு அண்ணாமலை பதில்!
கோவை கார் வெடிப்பில் 109 பொருட்கள் பறிமுதல்: என்.ஐ.ஏ எப்.ஐ.ஆரில் தகவல்!