மீண்டும் மணல்… தொடங்கியது பேரம்!

அரசியல்

தமிழ்நாடு முழுதும் பல மணல் குவாரிகள் மூடப்பட்டிருப்பதால் மணல் தட்டுப்பாடு அதிகமாகிவிட்டது. மணல் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி எம் சாண்ட் தயாரிப்பாளர்கள், அதன் விலையை இரண்டு மடங்கு உயர்த்தி விட்டார்கள். புதிதாக வீடு கட்டுவோரும் மணல் தட்டுப்பாடு காரணமாக கஷ்டப்பட்டு வருகின்றனர்,

தமிழ்நாடு அரசின் நீர் வளத்துறைதான் அரசு மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. கடந்த 2023 செப்டம்பர் மாதம் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் அரசு மணல் குவாரிகளை குறிவைத்து அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி பல மடங்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு, கள்ளச் சந்தைகளில் விற்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இது தொடர்பாக நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முத்தையாவிடமும் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து புகார்களுக்கு உள்ளான 5 மாவட்ட மணல் குவாரிகளுக்கு பொறுப்பான அம்மாவட்ட கலெக்டர்களையும் அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதைத் தொடர்ந்து அரசு நடத்தும் மணல் குவாரிகளில் இருந்து மணலை எடுத்துச் சென்று லாரிகளில் ஏற்றும் தொழில் செய்து வந்த எஸ். ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.
இதனால் மணல் தொழிலில் தேக்கம் நிலவிய நிலையில், இதுவரை மணலை யார்டுகளில் லோடிங் செய்து, அதை லாரிகளில் ஏற்றி வந்த மேற்குறிப்பிட்டவர்களையே தொடர்ந்து இந்த வேலைகளை செய்யுமாறு அரசு கேட்டுக் கொண்டது.
இதற்கிடையே கரூர் மாவட்டத்தில் மட்டும் இந்த மணல் அள்ளும் பணிகளை செய்ய இன்னொரு தரப்பினருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதைப் பயன்படுத்தித்தான் இப்போது சில இடைத் தரகர்கள் சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டுக் கொண்டு,.

“நாங்க சொல்லித்தான் இப்ப கரூர் பகுதிக்கு மட்டும் மணல் பிசினசை இன்னொருத்தருக்கு கொடுத்திருக்காங்க. இதேபோல மத்த பகுதிகளிலும் வெவ்வேறு நபர்களுக்கு பிரிச்சுக் கொடுக்கப் போறாங்க. உங்களுக்கு வேணும்னா அட்வான்ஸ் கொடுங்க.
உதயநிதி, சபரீசனுக்கு நெருக்கமாக இருக்குறவங்களை எங்களுக்கு நல்லா தெரியும். அவங்க மூலமாதான் கரூர் பகுதிக்கு நாங்க எடுத்துக் கொடுத்தோம். அதேபோல உங்களுக்கும் மத்த பகுதிகளில் இருக்கும் மணல் குவாரிகளில் யார்டுகளில லோடிங் செய்யும் வேலையை எடுத்துத் தர்றோம்” என்று மணல் ருசி பார்க்க ஆசைப்படும் தொழிலதிபர்களிடம் பேரம் பேசி வருகிறார்கள்.

இதே க்ரூப்தான் 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்த புதிதில்… ‘மணல் பிசினஸ் வாங்கித் தருகிறோம்’ என்று அப்போதும் இதேபோன்ற ஆசை வார்த்தை காட்டி சிலரிடம் பணம் வாங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு இப்போது வரை எந்த வேலையையும் எடுத்துக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையே இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி, “தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் மணல் ஆயிரம் ரூபாய் என அறிவித்தது. ஆனால் கடந்த 3 மாதங்களாக தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் இயக்கப்படாததால், மக்களுக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் மணல் தட்டுப்பாடு அதிகமாகிவிட்டது. மேலும் மணல் லாரி உரிமையாளர்களும் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

அதனால் தமிழக முதல்வர் கவனம் செலுத்தி, தமிழக சுற்றுச் சூழல் மதிப்பீட்டு ஆணையம் தமிழ்நாட்டில் 26 மணல் குவாரிகளை இயக்க மூன்று நாட்களுக்கு முன் அனுமதி கொடுத்துள்ளது. அவற்றை இயக்கச் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மணல் தட்டுப்பாட்டை சாக்காக வைத்துக் கொண்டு ஒரு க்ரூப் ஸ்டார் ஹோட்டகளில் பேர வேலைகளில் ஈடுபடுவதை அரசு தடுக்க வேண்டும் என்கிறார்கள் நீர்வளத்துறை அதிகாரிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு : கோவையில் என்.ஐ.ஏ ரெய்டு!

லூசிஃபர் 2 : கருப்பு உடையில் மாஸ் காட்டும் மோகன்லால் : புது போஸ்டர் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *