திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மேலிடம் விரும்பியதன் காரணமாகவே இடைத்தேர்தலில் போட்டியிட ஒத்துக்கொண்டேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை இன்று(ஜனவரி 23)சந்தித்து இளங்கோவன் வாழ்த்துப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நானும், காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்தோம்.
காங்கிரசுக்கு ஆதரவு தருவதற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டோம். தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவரும் வருவதாக சொல்லியிருக்கிறார்.
வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே திமுக அமைச்சர்கள் முத்துச்சாமி, நேரு போன்றவர்களும் நிர்வாகிகளும் வாக்கு சேகரிக்கத் தொடங்கினர். அதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம். காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு என்பது மிகப்பிரகாசமாக இருக்கிறது.
திமுக கூட்டணி என்பது வலுவான கூட்டணி என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் காவலனாக இருக்கக்கூடிய ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
அவர் மீதுள்ள நம்பிக்கைக்காக நிச்சயம் மக்கள் கை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள். காங்கிரஸ் மேலிடம், திமுக மூத்த தலைவர்கள் விரும்பியதால், அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நான் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வெற்றியில் நம்பிக்கை இருக்கிறது. வேட்பாளரை பற்றி கவலைப்படாமல் முன்னதாகவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம்.
ஆனால் எதிரணியில் இருக்கிறவர்கள் போட்டியிடலாமா, வேண்டாமா, யாரைப் போடுவது என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
கலை.ரா