டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அமெரிக்க பயணம்…  மாறும் ஷெட்யூல்? திமுகவில் பரபரப்பு!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் முதல்வர் ஸ்டாலின்  அமெரிக்க நிகழ்வுகள் பற்றிய வீடியோக்களும் போட்டோக்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.  செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஸ்டாலின் இருப்பார் என்பதுதான் பயணத் திட்டம்.

முதல் நிகழ்ச்சியாக இந்திய நேரப்படி  ஆகஸ்டு 30 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க முதலீட்டாளர்களை சந்தித்து உரையாற்றினார் ஸ்டாலின். 2030க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதே இலக்கு என்று பேசிய ஸ்டாலின், தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகளுக்கு ஏற்றது தமிழ்நாடுதான் என்று அழைப்பு விடுத்தார்.

ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கும் இந்த நேரத்தில் அவர் கலந்துகொள்ள வேண்டிய முக்கிய நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதிதான் கலந்துகொண்டு வருகிறார்.  அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது மாதிரி, ‘துணை முதல்வர் என்ற நிலையில் இருந்துதான் இப்போது உதயநிதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கட்சி நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள், திருமணம்,  இறப்பு உள்ளிட்ட நல்லது கெட்டதுகளுக்கு உதயநிதிதான்  ஸ்டாலின் இடத்தில்  சென்று வருகிறார்.

இந்த நிலையில் கோட்டை வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, ‘முதல்வரின் அமெரிக்க பயணம் திட்டமிட்ட நாட்களை விட  மேலும் சில நாட்கள் நீடித்தாலும் ஆச்சரியம் இல்லை’ என்று தெரிகிறது.

அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ஆகஸ்டு 27 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போதே முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் ஒரு தகவலை சொன்னார். அதாவது,  ‘முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு என்னை சந்திக்க டைம் கேட்டிருக்காங்க.  இப்ப நான் கொடுத்திருக்கிற நாட்களே போதாதுனு கருதுறேன்’ என்று சொல்லியிருந்தார்.

இதன்படி பார்த்தால் முதல்வரின் முதலீட்டாளர்கள் சந்திப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும், இதன் காரணமாக அவரது அமெரிக்க  பயணத்தின் நாட்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது’  என்றும் கூறுகிறார்கள்.

அறிவாலய வட்டாரத்தில் கேட்டபோது,  ‘ஏற்கனவே 16 நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது.  பயணத்தைத் தொடங்கும்போதே  அதிக நாட்கள் என அறிவித்தால், அது நிர்வாக வட்டாரத்திலும், கட்சி வட்டாரத்திலும் வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்… பயண நாட்கள் அதிகரிக்கும் தகவல் பின்னர் கூட அறிவிக்கப்படலாம். இப்போதைய நிலவரப்படி முதல்வரின் அமெரிக்க பயணத் திட்ட நீட்டிப்பு பற்றி கட்சிக்கு தகவல் இல்லை. அப்படி நீட்டிக்கப்பட்டால் முப்பெரும் விழாவும் அதற்கேற்ற மாதிரி திட்டமிடப்படும்’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொது இடங்களில் ‘மாதவிடாய் அறைகள்’… முதல்வருக்கு பூங்கோதை ஆலடி அருணா கோரிக்கை!

Paris Paralympics: அடுத்தடுத்து 4 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா… மோடி வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share