வைஃபை ஆன் செய்ததும் அறிவாலயத்தில் நடந்து வரும் திமுக நிர்வாகிகள் சந்திப்பு புகைப்படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அதே நேரம் நெல்லை மாநகராட்சி அவசரக் கூட்டம் ஜனவரி 30 ஆம் தேதி கூட்டப்பட்டதன் அழைப்பும் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
இவற்றை பார்த்துக் கொண்ட வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. நெல்லை மாநகராட்சி திமுகவைச் சேர்ந்த மேயர் சரவணனுக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த பெரும்பான்மை கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். கடந்த ஜனவரி 12ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லை சென்று கவுன்சிலர்களை சந்தித்து அவசர மீட்டிங் போட்டார்.
அதன் பிறகு விருதுநகரில் உள்ள தங்கம் தென்னரசு இல்லத்தில் அனைத்து கவுன்சிலர்களும் அழைக்கப்பட்டு அங்கே துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை பஞ்சாயத்து செய்தார்.
இதன் பிறகு ஜனவரி 12ஆம் தேதி கூட்டத்தில் எந்த கவுன்சிலரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் அந்தப் பிரச்சினை தற்காலிகமாக முடிந்தது. இந்த நிலையில்தான் ஜனவரி 30 ஆம் தேதி நெல்லை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது. இதற்கான அழைப்பு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிற நிலையில், கடந்த சில தினங்களாக நெல்லை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டல வாரியாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தலின் பெயரில் நடந்த இந்த கூட்டத்தில் 30ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர் டி பி எம் மைதீன் கான் கவுன்சிலர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் முன்னாள் மத்திய மாவட்ட செயலாளரும் தற்போதைய பாளையங்கோட்டை எம் எல் ஏ வுமான அப்துல் வஹாபின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மேயரை லீவு போட்டுவிட்டு போகும்படி எங்க எம்எல்ஏ சொல்லிட்டாரு என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அப்படி என்றால் 30 ஆம் தேதி கூட்டமும் நடைபெற முடியாத சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் நெல்லை கவுன்சிலர்கள்.
இந்த நிலையில் தான் ஜனவரி 29ஆம் தேதி அறிவாலயத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதிலே நெல்லை மேயர் என்ற வகையில் சரவணனும் கலந்து கொண்டார் அப்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மேயரை நோக்கி கேள்விகளை கேட்க அதற்கு மேயர் தன் நிலையை சொல்லி சமாளித்திருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி இந்தக் கூட்டத்தில் பேசுகையில், ’நாளைய மாநகராட்சி கூட்டத்தை சுமூகமாக நடத்த பாருங்கள். தலைவர் வெளிநாட்டில் இருக்கிறார். இந்த நிலையில் கூட்டம் நடத்த முடியவில்லை என்றால் அடுத்த கட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து நெல்லை அரசியல் வட்டாரத்தில் விசாரிக்கும் போது, ’சரவணனை எந்த காரணத்தை முன்னிட்டும் மீண்டும் மாநகராட்சிக்குள் மேயராக அனுமதிக்க முடியாது என்பதில் அப்துல் வஹாப் உறுதியாக இருக்கிறார். அவரது ஆதரவாளராக இருக்கும் கவுன்சிலர்கள் மூலம் இதை சாதிக்க நினைக்கிறார். மேயருக்கு பதில் பொறுப்புக் குழு நியமிக்கவும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இதே நிலை தொடர்ந்தால் நெல்லை மாநகராட்சி எந்தவிதமான பணிகளையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும். தேர்தல் நேரத்தில் ஏற்கனவே டவுனில் திமுகவுக்கு பாதகமாகும். இந்த சூழலை உருவாக்கி கட்சிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அப்துல் வஹாப் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கம் தென்னரசுவிற்கு கோரிக்கைகள் சென்றுள்ளன. அவரும் அதுபற்றி உதயநிதியிடம் எடுத்துச் சொல்லியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அதுவும் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் எம்எல்ஏ வை கட்சியிலிருந்து நீக்கலாமா என்ற ஆலோசனையும் நடந்திருக்கிறது.
ஏற்கனவே திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் மீது தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதேபோல அப்துல் வஹாப் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என்பதுதான் நெல்லை மாநகர திமுகவில் இப்போது பேச்சு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குடிசையில் ஏழைகள் : ஆளுநர் குற்றஞ்சாட்டு… புள்ளிவிவரத்துடன் அமைச்சர் பதில்!
பிப்ரவரி சபதம் : அப்டேட் குமாரு