கூட்டணிக்குள் இருந்தே தோழமை சுட்டுதல் என்ற பாணியில் தொடர்ந்து திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளையும், திமுக என்ற கட்சியின் அரசியல் போக்கையும் சுட்டிக் காட்டுவதில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து வேகத்தோடு செயல்பட்டு வருகிறார்.
அதன் உச்சகட்டமாகத்தான் பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்பாட்டத்தில் பேசியிருக்கிறார் திருமாவளவன்.
தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்ட பாஜகவினர் திட்டமிட்டு வருகிறார்கள் என்றும் அதைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (பிப்ரவரி 28 ) மாலை விடுதலைச் சிறுத்தைகள் ஆர்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பேச இரவாகிவிட்டது.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் கருத்தியல் யுத்தம் திமுகவுக்கும் பாஜகவுக்கும் அல்ல. விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பாஜகவுக்கும்தான். கருத்தியல் ரீதியாக எங்களோடு மோதிப் பார்க்க தயாரா? பதவியைப் பார்த்து பல் இளிக்கிறவன் அல்ல திருமாவளவன்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை இரண்டே ஆண்டுகளில் தூக்கிப் போட்டு வந்தவன். கடந்த தேர்தலில் தளபதி என்னிடம், ‘நீங்கள் உறுதியாக ஜெயிக்க வேண்டும் உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என்று சொன்னார்.
நான்,தோற்றாலும் பரவாயில்லை தனி சின்னத்தில்தான் நிற்பேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு தனி சின்னத்தில் நின்றேன். நாளைக்கே இந்த எம்பி பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்.
’அண்ணாமலை முன்னாள் ராணுவத்தினர் கலந்துகொண்ட அந்த ஆர்பாட்டத்தில் பேசுகிறார். ‘உங்களிடம் துப்பாக்கி இருக்கிறது. அதற்குள் குண்டுகள் இருக்கின்றன, சுட்டுத் தள்ளுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று பேசுகிறார்.
இந்நேரம் அண்ணாமலை மீது வழக்குப் போட்டிருக்க வேண்டுமா இல்லையா? இதேபோல முஸ்லிம் சமுதாயத்தில் யாராவது பேசினால் சும்மா இருப்பீர்களா? இதேபோல திருமாவளவன் பேசினால் சும்மா இருந்திருப்பீர்களா? அண்ணாமலை வன்முறையைத் தூண்டுகிறார். வீரமணி அவர்கள் 90 வயதில் சமூக நீதிக்காக பயணம் போகிறார். அவர் காரை மறித்து கோஷம் போட்டு அச்சுறுத்துகிறார்கள்.
பெரியார் வழி வந்த அண்ணா, கலைஞர் வழி வந்த திமுக அரசு இங்கே நடந்துகொண்டிருக்கிறது. திமுகவின் தாய்க் கழகமான திராவிடர் கழக தலைவர் வீரமணியின் காரை சூழந்துகொண்டு அவரை அச்சுறுத்துகிறார்கள் என்றால் கவலையாக இருக்கிறது.
காவல்துறை மெத்தனமாக இருக்கிறதா? அல்லது அரசு பாராமல் இருக்கிறதா? தமிழக காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டுமே தவிர, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடாது.
அதிமுக வேண்டுமானால் அமித் ஷாவின் இஷ்டத்துக்கு ஆடலாம். நான் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்னவுடன் என்னை எல்லாரும் திட்டுகிறான். நான் இந்தப் பக்கம் போகலமா, அந்தப் பக்கம் போகலாமா என்ற அரசியல் பண்ணக் கூடியவன் அல்ல. நான் தெளிவாக சொல்லுகிறேன். பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் இருக்க மாட்டோம்.
இந்தியாவில் எந்த அரசியல் தலைவருக்கு இந்த தில் இருக்கிறது? என்னை மாதிரி இந்தியாவில் ஒரே ஒருவனுக்கு தில் இருக்கிறதா? சொல்லச் சொல்லு. அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்பட்டாலும் இதில் எந்த காம்ப்ரமைஸும் கிடையாது” என்று பேசினார் திருமாவளவன்.
பாஜகவுடன் திமுக நெருங்கிச் செல்கிறதோ என்ற தோற்றம் அவ்வப்போது ஏற்பட்டுதான் வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே திருமாவளவன் எச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறார். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவரை எதிர்த்த காங்கிரசார் கைது செய்யப்பட்டனர், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் ஸ்டாலின் படத்தை அழித்து மோடி படத்தை பாஜகவினர் வரைந்தனர். இதுகுறித்து அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்,. அழகிரியே, ‘பாஜகவினரை பார்த்து தமிழ்நாடு போலீஸ் அஞ்சுகிறதா?’ என்ற கேள்வியை எழுப்பினார். இன்று அதன் தொடர்ச்சியாக திருமாவளவனும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சமீபத்தில் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி கோட்டையில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு முன்பே சபரீசனுடன் அன்புமணி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் அதன் அடுத்த கட்டமாகவே ஸ்டாலினை சந்தித்தார் என்றும் திருமாவளவனுக்கு தகவல்கள் கிடைத்தன.
மேலும் பிப்ரவரி 28 மாலை முதலமைச்சரின் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை டெல்லியில் தனிப்பட்ட முறையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தது பற்றியும் திருமாவளவனுக்கு டெல்லியில் இருந்து சில பேர் பேசியிருக்கிறார்கள்.
இதெல்லாம் சேர்த்துதான் வள்ளுவர் கோட்ட ஆர்பாட்டத்தில் ராஜினாமா செய்யத் தயார் என்பது வரை பொங்கித் தீர்த்துவிட்டார் திருமாவளவன் என்கிறார்கள் சிறுத்தைகள் தரப்பில்.
–வேந்தன்
ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர்: தடையை நீக்க மறுத்த நீதிமன்றம்
சுற்றுலா, டேப்லெட்: ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!