மறைந்த மூத்த அரசியல் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர் எம் வீரப்பன் (வயது 98) உடலுக்கு மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஆர். எம். வீரப்பனுக்கு இன்று (ஏப்ரல் 9) காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மதியம் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஆர் எம் வீரப்பன் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமின்றி திரை, இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பேரிழப்பு என்று கூறியிருந்தார்.
மேலும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், அங்கு ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
முதல்வருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், “திராவிட இயக்க முன்னோடியும் – முதுபெரும் அரசியல் தலைவருமான எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நண்பர் – நமது முதலமைச்சரின் அன்புக்குரியவராக திகழ்ந்த பெரியவர் ஆர்.எம்.வீ மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் – நண்பர்கள் – எம்.ஜி.ஆர்.கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கிறேன். பெரியவர் ஆர்.எம்.வீயின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக இலக்கும்… மாம்பழம் விலையும் : வைரலாகும் முன்னாள் தேர்தல் ஆணையரின் பதிவு!
பேடிஎம் தெரியும் பே பிஎம் திட்டம் தெரியுமா? – பிடிஆர் புது விளக்கம்!