மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் மெசேஜ்!

அரசியல்

ஆகஸ்டு 23ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கே கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் என நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் ஆகஸ்டு 26 ஆம் தேதி சென்னை திரும்பினார்.

கோவை மாவட்ட பயணத்தின்போது திமுக மாவட்டப் பொறுப்பாளர்களை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அருகே வைத்துக்கொண்டு சந்தித்தார் முதல்வரும் கட்சித் தலைவருமான ஸ்டாலின்.

ஏற்கனவே ஆகஸ்டு 23 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ‘செந்தில்பாலாஜிக்கு எதிராக மாவட்டப் பொறுப்பாளர்கள்: ஸ்டாலின் கோவை விசிட் ஹாட்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “தற்போதுள்ள கோவையின் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களையும் மாற்றிவிட்டு, 5 ஆக இருக்கும் மாவட்ட அமைப்புகளை மூன்றாக மாற்றவும் திட்டமிட்டுள்ள பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி.

கோவை மாநகரத்துக்கு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவரும் தற்போது துணை மேயராக இருக்கக்கூடிய வெற்றி செல்வனை நியமிக்கவும், புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளராக சூளூர் தளபதி முருகனையும் நியமிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்த பட்டியலையும் ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டார். ஏற்கனவே செந்தில்பாலாஜி தங்களை மதிக்கவில்லை என்று விரக்தியில் இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் இந்த முடிவால் அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

Stalins message to Coimbatore

இந்த நிலையில்… கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துபோன பிறகு கட்சி நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்தோம்.

“முதல்வர் கோவை வந்தார். சர்க்யூட் ஹவுஸில் தங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் பையா கிருஷ்ணன், கார்த்திக், சேனாதிபதி, வரதராஜன், சிஆர் ராமச்சந்திரன் ஆகியோர் முதல்வர் தங்கிய அறைக்கு அழைக்கப்பட்டனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி முதல்வர் அருகில் நின்றிருந்தார். தொண்டாமுத்தூர் ரவியை மட்டும் ஸ்பெஷலாக அழைத்து,’இவர்தாங்க அந்த ரவி’ என்று அறிமுகப்படுத்தினார் செந்தில்பாலாஜி. ’வாங்க ரவி’ என்றார் முதல்வர்.

அப்போது அறையிலிருந்த மாவட்ட பொறுப்பாளர்கள் முகங்கள் இறுக்கமாகக் காணப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் காத்திருக்கும் மற்றவர்களைச் சந்திக்கத் தயாரானார் முதல்வர்.

அப்போது தற்போதைய மாவட்ட பொறுப்பாளர்களைப் பார்த்து, ‘ஒத்துமையா செயல்படுங்க. தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுங்க’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். வெளியே வந்தது முதல், மாற்றம் உறுதி” என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் மாவட்டப் பொறுப்பாளர்கள்.

தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர்களில் சிலரிடம் பேசினோம். “அமைச்சர் செந்தில் பாலாஜியை தலைவர் முழுமையாக நம்புகிறார். ஆனால் செந்தில் பாலாஜி கோவையில் கட்சியை வளர்க்கச் செயல்படவில்லை, தனது கோஷ்டியை வளர்க்கத்தான் செயல்பட்டு வருகிறார்.

இத்தனை காலம் கஷ்டப்பட்ட மாவட்டச் செயலாளர்களைத் தூக்கியெறிய நினைக்கிறார். அதிமுக, அமமுக போலவே திமுகவிலும் அரசியல் செய்ய நினைத்து அதன்படியே செய்து வருகிறார்.

கோவை விமான நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கொடிசியா பகுதியில் வீடு எடுத்து வைத்துள்ளார். அந்த வீட்டில் கட்சிக்காரர்களை பெயர் அளவில் சந்தித்துவிட்டு கரூர் போகிறேன் என்று புறப்படுகிறார். ஆனால் ஒரு மணி நேரத்தில் வாடகை காரில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி விடுவார்.

வீட்டிலிருந்தபடியே கட்சிக்காரர்கள் வந்தால் வீட்டில் இல்லை ஊருக்கு போய்விட்டார் என்று சொல்லி அனுப்புவார்கள். இவர்தான் கட்சியை வளர்க்கப் போகிறாரா? கோவை, கரூர் மாவட்ட கட்சியை செந்தில்பாலாஜியிடம் ஒப்படைத்துவிட்டது திமுக தலைமை. நாங்கள் காலம்காலமாக எந்த சூழ்நிலையிலும் திமுகவிலேயே இருந்து வந்திருக்கிறோம். இனி வரும் காலம் எங்களை ஓர் முடிவெடுக்க வைத்துவிடும் போலிருக்கிறது” என்கிறார்கள்.

மாவட்டப் பொறுப்பாளர்கள் என்னதான் புலம்பினாலும் செந்தில்பாலாஜியிடம் கோவையை முழுமையாகக் கொடுத்துவிட்டார் ஸ்டாலின் என்பதே இந்த நான்கு நாட்கள் சொல்லும் செய்தி!

-வணங்காமுடி

செந்தில்பாலாஜி என்னிடம் கொடுத்த பட்டியல்: கோவையில் ஸ்டாலின் பேச்சு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *