ஸ்டாலின் போட்ட ஊழல் பட்டியல்: சிக்கிய பாஸ்கர் – சூடான பின்னணி!

அரசியல்


திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுகவின் முக்கிய புள்ளிகளைக் குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர், கரூரைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாமக்கல்லைச் சேர்ந்த தங்கமணி, கோவையைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, வேலூரைச் சேர்ந்த கே.சி.வீரமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போதைய நாமக்கல் நகர அதிமுக செயலாளர் கே.பி.பி.பாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.1/AC/2022 பிரிவு 13(2) r/w 13(1) (e) of PC Act 1988, 109 r/w 13(2) r/w 13(1) (e) of PC Act 1988 and 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018-ன் படி கே.பி.பி.பாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

alt="admk ministers and mla corruptions list"

முதல் தகவல் அறிக்கையில், ‘நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூர், கொண்டிச்சேட்டிபட்டி பகுதியில் வசிக்கும் பரமசிவன் மகன் கே.பி.பி.பாஸ்கர் முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாக அவரது மனைவி உமாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பி.ராகவர்த்தனி, பி. யோகவர்த்தினி, .பி.ஜெயவாணி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.பி.பாஸ்கரின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். பாஸ்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வங்கிக் கணக்கு மற்றும் பதிவு ஆவணங்களை சேகரித்து ஆய்வு செய்ததில் வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை சேர்த்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2016ல் 1,86,027,22 ரூபாய் சொத்துக்கள் மட்டுமே பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரிலிருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 7, 47,03,528 கோடி ரூபாயாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதாவது 315 சதவிகிதம் உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

alt="admk ministers and mla corruptions list"

இந்தசூழலில், தனது வழக்கமான பாணி போல் இன்று காலை முதல் அதிரடியாய் கே.பி.பி.பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. கே.பி.பி. பாஸ்கரின் நெருங்கிய நண்பரின் ஆர்.ஆர். இன்போ கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் வீடு மதுரை கே.கே.நகரில் உள்ளது. இங்கு 6 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோன்று நாமக்கல்லில் 24 இடங்கள், திருப்பூரில் ஓரிடம் என மொத்தம் 28 இடங்களில் சோதனை நடக்கிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டு வரிசையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி.பி.பாஸ்கருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் பட்டியலில் இருந்த ஒரே எம்.எல்.ஏ

alt="admk ministers and mla corruptions list"

இதுகுறித்து நாமக்கல் அதிமுகவினரிடையே விசாரித்த போது, “கே.பி.பி.பாஸ்கரின் அரசியல் பயணம் 2006ல் தான் தொடங்கியது. 2006 நகர் மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ல் திமுக ஆட்சியிலிருந்தாலும் நாமக்கல்லில் அதிக இடத்தை அதிமுகதான் பிடித்தது. அதனால் நாமக்கல் நகர்மன்ற தலைவரானார் பாஸ்கர். அதன்பின் இவருடைய நடவடிக்கை சரியில்லாததால் எதிர்ப்பு கிளம்பியது. உடனே உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து திமுகவைச் சேர்ந்த செல்வராஜை சேர்மேனாக தேர்ந்தெடுத்தனர். கே.பி.பி.பாஸ்கர் வெறும் உறுப்பினராக மட்டும் இருந்தார்.

alt="admk ministers and mla corruptions list"

தன்னை பதவியில் இருந்து நீக்கிய அனுதாபத்தையும், தனக்கு இருந்த அந்தஸ்தையும் பயன்படுத்தி 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது சீட் வாங்க முயன்றார். மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் நல்ல தொடர்பிலிருந்ததால் அவர் பிரபாகருக்கு சீட் கொடுக்க பரிந்துரை செய்தார். அதன்படி சீட் கொடுக்கப்பட்டதில் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது இவரும் எம்.எல்.ஏ.வானார்.
தங்கமணி அமைச்சராக இருந்தாலும் நாமக்கல்லில் நடக்கும் பெரும்பாலான விஷயங்களில் தலையிடமாட்டார்.

நாமக்கல் சார்ந்த எல்லா விஷயங்களிலும் பாஸ்கரைக் கேட்காமல் தங்கமணி எதுவும் செய்யமாட்டார். தன்னுடைய தொகுதியான குமாரபாளையத்தில் நடக்கும் பிரச்சினையைத் தவிர நாமக்கல் சார்ந்த வேறு எந்த விஷயம் தங்கமணியிடம் போனாலும் பாஸ்கரைப் பாருங்கள் என்று சொல்லிவிடுவார். அந்தளவுக்குச் செல்வாக்குடன் இருந்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதல்வரானார். எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, பாஸ்கர் மூவரும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாஸ்கருக்கான செல்வாக்கு குறையவில்லை” என்றனர்.

alt="admk ministers and mla corruptions list"

தொடர்ந்து அவர்கள், “தமிழக முதல்வர் ஸ்டாலின், 2020ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் எடப்பாடி பழனிசாமி உட்பட முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய ஊழல் பட்டியலைக் கொடுத்தார். அந்த பட்டியலில் அமைச்சர்கள் அல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரது பெயர் இடம்பெற்றிருந்தது. அது பாஸ்கர்தான்” என்று கூறினார்.

மேலும், “பாஸ்கர் வீடு சுவாமி நகர்ப் பகுதியில் தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பள்ளி அருகில் இருக்கிறது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் 11 கோடி ரூபாய். இதுமட்டுமின்றி கரூர் செல்லும் வழியில் கீரம்பூர் டோல்கேட் பகுதியில் ஒரு பங்களா கட்டியிருக்கிறார். இதன் மதிப்பு 4 கோடி ரூபாய். மாலை நேரத்தில் நண்பர்களுடன் ஓய்வெடுக்க அங்குச் சென்றுவிடுவார்” என்று கூறியவர்கள்,

alt="admk ministers and mla corruptions list"


“எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த போதும் பல முறை நாமக்கல் வந்திருக்கிறார். ஆனால் அவரது ஆதரவாளரான பாஸ்கர் ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. ஒரு தலைவர் வருகிறார் என்றால் கட்சியினர் தங்களது வீட்டுக்கு அழைத்துப் போகத்தான் ஆசைப்படுவார்கள்.

ஆனால் வெளியிலேயே எதாவது ஒரு இடத்தில்தான் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார். காரணம், அப்படி யாரையாவது வீட்டுக்கு அழைத்துச் சென்றால் வீட்டைப் பார்த்துப் பிரமித்துவிடுவார்கள் என்பது அவரது எண்ணம். ஏன் மாவட்டத்திலேயே இருக்கும் தங்கமணியைக் கூட அழைத்து போகமாட்டார். கடந்த 10 ஆண்டுகளில் நாமக்கல் அதிமுகவில் எது நடந்தாலும் இவர் மூலமாகத்தான் நடக்கும். அதிலிருந்து வந்த வருமானம்தான் எல்லாமே” என்கின்றனர் நாமக்கல் அதிமுகவில்.
பிரியா

எடப்பாடி உயிருக்கு அச்சுறுத்தல் : டிஜிபிக்கு வந்த மனு!

+1
1
+1
3
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “ஸ்டாலின் போட்ட ஊழல் பட்டியல்: சிக்கிய பாஸ்கர் – சூடான பின்னணி!

  1. இடையில் பிரபாகர் என்ற பெயர் எப்படி வந்தது? பாசுகர் என மாற்றுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *