எதிரிகள் கதறினாலும் கலைஞரின் புகழ் மறையாது : மு.க.ஸ்டாலின்

அரசியல்

தமிழினத்தின் எதிரிகள் என்னதான் கதறினாலும்  கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்  எழுதியிருக்கிறார்.

அவர் இன்று (ஆகஸ்டு 4) எழுதியுள்ள கடிதத்தில்…

ஸ்டாலின் மடல்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். கலைஞரின் நினைவு நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணா மறைந்தபிறகு, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 3 அன்று சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு கழகத்தின் சார்பில் பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்புடன் அமைதிப் பேரணி நடத்தி அதனை வழிநடத்திச் செல்வது நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் வழக்கம்.

அமைதிப் பேரணி

அண்ணா வழியில் அன்றாடம் பயணித்த தலைவர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில், வங்கக் கடற்கரையில் தனது தங்கத் தலைவர் பேரறிஞர் அண்ணா துயிலும் இடத்திற்கு அருகே நிரந்தர ஓய்வு கொள்ளும் கலைஞரின் நினைவிடத்திற்கு அவரது முதலாமாண்டு நினைவு நாளில் எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அதற்கடுத்த இரண்டாண்டுகளில் கொரோனா கால நடைமுறைகள் காரணமாக நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்திட வாய்ப்பில்லாமலே போய்விட்டது.

சாதனைகளை காணிக்கையாக்குவோம்

அவர் நினைத்தபடி களப்பணியாற்றி, மக்களின் அன்புடனும் ஆதரவுடனும் தி.மு.கழகத்தை ஆட்சியில் அமரவைத்து, 10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழ்நாட்டை உதயசூரியனால் விடியச் செய்து, பல்வேறு துறைகளிலும் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர வைத்து, அத்தகைய வெற்றியையும் சாதனைகளையும் பேரணியாகச் சென்று முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள், அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளில் அமையவிருக்கிறது.

அண்ணா சாலையில் சிலை

தலைவர் கலைஞரால் ‘அண்ணா சாலை’ எனப் பெயர் சூட்டப்பட்ட சாலையில் தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு நடுவே கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அந்தத் திருவுருவச் சிலையிலிருந்து தொடங்கி, பேரறிஞர் அண்ணா துயிலுமிடம் அருகே தலைவர் கலைஞர் ஓய்வெடுக்கும் நினைவிடம் வரை ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. 

சென்னையில் மட்டும்தானா அமைதிப் பேரணி?

தலைநகர் சென்னையில் மட்டும்தானா அமைதிப் பேரணி? தமிழ்நாடு முழுவதும் எத்திசையிலும் புகழ் மணக்கும் தலைவரன்றோ முத்தமிழறிஞர் கலைஞர் ! அதனால், உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரோட்டமான திருவுருவச் சிலை அமைந்துள்ள ஊர்களில் கழகத்தினர் மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம். இனிமேல் சிலை அமையவிருக்கும் ஊர்களில், கழக அலுவலகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் புகழ் வணக்கம் செலுத்திடலாம்.

புகழ் வணக்கம் செலுத்திடுக

நினைவேந்தல் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் படங்களும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியில் நிறைந்திடும் வண்ணம் கிளைகள் தோறும் புகழ் வணக்கம் செலுத்தப்பட வேண்டும். அந்தப் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்திடும் வகையில் கழக ஆட்சியின் திட்டங்கள் அமைந்திடும். ஆட்சியின் மாட்சிக்கு சாட்சியம் கூறும் வகையில் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பான செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.

கலைஞர் புகழை மறைக்கமுடியாது

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற உணர்வினைத் தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியிருக்கிறார். தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு நேரடியாகவும் – மறைமுகமாகவும் விலை போகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும். கடல் அலை போல எழும் “வாழ்க வாழ்க வாழ்கவே.. தலைவர் கலைஞர் வாழ்கவே” என்ற முழக்கம், வானம் அதிரும் வகையில் ஒலிக்கட்டும்!” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கலை.ரா

மோடியை பார்த்து எனக்கு பயமில்லை: ராகுல்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *