”சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட ஆவடி மாநகர திமுக செயலாளரான எஸ்.என்.ஆசிம் ராஜா அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சன் பிரகாஷ் ஆவடி மாநகர பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என்று பிப்ரவரி 8 ஆம் தேதி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பொதுச் செயலாளர் துரைமுருகனின் அறிவிப்பு கட்டம் கட்டப்பட்டு வெளியானது.
நீக்கப்பட்ட ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் என்பதுதான் ஹாட்.
ஆவடி மாநகரம் மட்டுமல்ல அதை சுற்றி இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வியாபாரிகள், காண்ட்ராக்டர்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரது வாட்ஸ் அப் குரூப்பிலும் இந்த முரசொலியின் கட்டம் வைரலாக பரவியது.
அமைச்சர் ஆவடி நாசரின் மகனான ஆசிம் ராஜா மீது திமுக தலைமை மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை… நாசருக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கை என்றே கூறுகிறார்கள் திமுக தலைமை கழக வட்டாரத்தில்.
ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இருந்தபோதே, அவருடன் தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் ஒரு சிலரில் முக்கியமானவர் அமைச்சர் நாசர். அப்படிப்பட்ட நாசரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் புகழ்ந்து தள்ளினார் ஸ்டாலின்.
கடந்த ஜனவரி 25 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த மொழிப்போர் வீரவணக்க பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டின் போது திமுக தொண்டர்களின் மீது அமைச்சர் நாசர் கல்லை வீசி தாக்கிய வீடியோ வைரலானது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல பொதுமக்களும் இதை மிகக் கடுமையாக விமர்சித்தனர். ஏற்கனவே திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் எச்சரித்தும் இதுபோன்ற சம்பவங்கள் திமுகவில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில் அமைச்சர் நாசரை மையமாக வைத்து முதல்வரிடம் சென்று சேர்ந்த மூட்டை மூட்டையான புகார்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்தன. இந்தப் பின்னணியில் தான் அமைச்சர் நாசருக்கு விடப்பட்ட எச்சரிக்கையாக அவரது மகனின் திமுக ஆவடி மாநகர செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஆவடியில் இருக்கும் திமுக, காங்கிரஸ், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி அரசியல் பிரமுகர்களிடம் இது பற்றி விசாரித்தோம்.
“தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை ஆவடியே ஆரவாரமாக கொண்டாடுகிறது. ஏனென்றால் அமைச்சர் நாசரின் மகனுடைய பரிவாரங்கள் அவ்வளவு அட்டகாசங்களையும் ஆவடியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தற்போது ஆவடி மாநகராட்சி நான்காவது வார்டு உறுப்பினராக இருக்கிறார். தான் அமைச்சராக இருக்கும் போது, தன் மகனை மாநகராட்சி மேயராக அமர்த்தி பார்க்க ஆசைப்பட்டார் நாசர். ஆனால் ஆவடி மேயர் பதவி பட்டியல் வகுப்புக்கு ஒதுக்கப்பட்டது.
தன் மகனை துணை மேயராகவாவது ஆக்கலாம் என்று முயற்சி செய்தார் நாசர். ஆனால் அது மதிமுகவுக்கு கூட்டணி தர்மப்படி அளிக்கப்பட்டு விட்டது. அதனால் தனது நெருங்கிய ஆதரவாளரான உதயகுமார் என்பவரை ஆவடி மேயர் ஆக்கிய அமைச்சர் நாசர், தன் மகன் ஆசிமை ஆவடி மாநகராட்சி திட்ட குழு உறுப்பினராக நியமித்தார்.

ஒவ்வொரு மாநகராட்சிக்கும் திட்ட குழு இருக்கிறது. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை பற்றி மேயரிடம் பரிந்துரை செய்தாலும்… அந்த பரிந்துரைகளை திட்டக் குழுவுக்கு அனுப்புவார் மேயர். திட்டக் குழு தான் எந்தத் திட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது என்று மேயருக்கு பரிந்துரை செய்யும். அந்த வகையில் திட்டக் குழு உறுப்பினராக இருக்கும் அமைச்சரின் மகன் ஆசிம் தான் நிழல் மேயராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்த அடிப்படையில் ஆவடி மாநகராட்சிக்குள் நடக்கும் அனைத்து திட்டப்பணிகளையும் தன் கைக்குள் வைத்திருந்தார் அமைச்சரின் மகன். மாநகராட்சியில் பில்டிங் துறையாக இருந்தாலும் இன்ஜினியரிங் துறையாக இருந்தாலும் எல்லா இடத்திலும் இவருக்கு ஆட்கள் இருக்கிறார்கள். எல்லா காண்ட்ராக்டுகளும் அமைச்சரின் மகன் விருப்பப்படி தான் நடக்கும்.
அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரின் அடிப்படையில் மழை நீர் கால்வாய் பணிகள் ஆவடியில் நடந்தன. அதற்கு அந்த ஆட்சியில் ஏற்கனவே 12% கமிஷன் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் 20 சதவீதம் கேட்கப்பட்டிருக்கிறது.
கடைசியில் 8% கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். இதுபோல் பல்வேறு கான்ட்ராக்டர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். கான்ட்ராக்டர்கள் சங்கம் இதை முதல்வர் வரை எடுத்துச் சென்றிருக்கிறது. தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு திருவள்ளூரில் ஆவடியில் நடப்பதாக கான்ட்ராக்டர்கள் சொல்கிறார்கள்.

ஆவடி அதை ஒட்டி உள்ள திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய திருமண மண்டபங்கள் இருக்கின்றன. இந்த திருமண மண்டபங்களுக்கு அப்ரூவல் முறையாக பெறப்படவில்லை என அதிகாரிகள் அழைப்பார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போய் பார்த்தால், ’அமைச்சரின் மகனை பார்த்துட்டு வாங்க’ என்று சொல்லுவார்கள்.
’மேல ரெண்டு ரூம் எக்ஸ்ட்ரா கட்டி இருக்கீங்க. அதுக்கு அப்ரூவல் வாங்கல… என்று சொல்லி 25 லட்ச ரூபாயில் ஆரம்பித்து கடைசியில் 10 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி வைத்து விடுவார்கள். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்கள், வீடு கட்டும் பில்டர்கள், தனிப்பட்ட முறையில் வீடு கட்டுபவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காமல் ஆவடியில் வசூல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
கூட்டணிக் கட்சியினர் மேற்கொள்ளும் தொழில்களில் கூட கடுமையான வசூல் செய்யப்படுகிறது. இது பற்றி திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் முதல்வருக்கே ஒரு விரிவான புகாரை அனுப்பி இருக்கிறார். அதன் பிறகு தான் அவருக்கு பிளானிங் பர்மிஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல்வரிடம் முறையிட்ட பிறகும் ஏற்கனவே கேட்ட லஞ்சத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வாங்கிக் கொண்டுதான் அதுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் திருவேற்காட்டில் அமைச்சர் ஆவடி நாசரின் மகளுக்கு திருமணம் நடந்தது. இதற்காக ஆவடி திருவேற்காடு திருமுல்லைவாயில் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் இருக்கும் பெரும் பெரும் திருமண மண்டபங்களை மூன்று நாட்கள் அமைச்சரின் ஆட்கள் ஆக்கிரமித்து விட்டார்கள். ஒரு திருமண மண்டபத்திற்கும் ஒரு நாள் வாடகை கூட அவர்கள் தரவில்லை.
இப்படி ஆவடி மாநகராட்சியில் ஆரம்பித்து தனிப்பட்ட முறையில் அமைச்சர் நாசர், அவரது மகன் ஆசிம் ராஜா ஆகியோர் மீது கடுமையான புகார்கள் முதல்வருக்கு சென்றிருக்கின்றன. தொடர்ந்து முதல்வருக்கே தனிப்பட்ட முறையில் புகார்கள் சென்றிருப்பதால் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதை முதல்வரின் முதல் சாட்டையாகக் கருதுகிறோம்” என்கிறார்கள் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர்.
கடந்த டிசம்பர் மாதம் ஆவடி அருகே பட்டாபிராம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்த ஆசிம் ராஜா அங்கிருந்த குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை அகற்றிய சம்பவத்தில் பாஜக கடும் கண்டனம் தெரிவித்து போலீசிலும் புகார் அளித்தது நினைவிருக்கலாம்.

15 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை ஒரு அமைச்சர் சென்று சந்தித்திருக்கிறார். அப்போது அவர் மீதான சில புகார்களை அவரிடமே கூறிய முதல்வர் ஸ்டாலின், “ஒரு காலத்தில் என் தோளில் அமர்ந்திருந்தவர்கள் இன்னைக்கு எங்க கிடக்கிறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?”என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் இப்படி சொன்ன 15 நாட்களுக்குள் ஒரு காலத்தில் அவரது தோளில் உட்கார்ந்து இருந்த அமைச்சர் நாசர் மகன் மீதே இன்று கட்சி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
ஆவடி மாநகர திமுக பொறுப்பாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள சன் பிரகாஷ் அமைச்சர் ஆவடி நாசரின் ஆதரவாளர் இல்லை. கடந்த 25 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி நாசரின் ஆதரவாளர் அல்லாத ஒருவர் கட்சிப் பொறுப்புக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள் திமுகவில்.
நாசரின் மகன் மீது எடுக்கப்பட்ட இந்தப் பதவி பறிப்பு நடவடிக்கை விரைவில் அமைச்சர் நாசரை நோக்கியே பாய்ந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் ஆவடி அரசியல் வட்டாரத்தினர்.
–வேந்தன்
குட்கா தடை ரத்து : தமிழக அரசு மேல்முறையீடு!
”அதானியை காப்பாற்ற நினைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல்காந்தி
Comments are closed.